பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

அகநானூறு - மணிமிடை பவளம்


        உள்ளார் ஆதலோ அரிதே-செவ்வேல்
        முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி
        செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
        ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
        செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி, 15

        நிலைபெறு கடவுள் ஆக்கிய,
        பலர்புகழ் பாவை அன்னநின் நலனே.

தோழியே, நீ வாழ்வாயாக! “என் தோள்களும் தம்முடைய பழைய அழகு கெட்டுப்போயின. நாள்தோறும் அன்னையும் பொறுத்தற்கு அரிய துயரம் கொண்டவள் ஆயினாள். பொன் தகடுகள் வேய்ந்த நீண்ட தேரினையுடையவன் தென்னவர் கோமானாகிய பாண்டியன், கணைய மரத்தினைப் போன்ற திரண்ட தோள்களையும் விரைந்து செல்லும் தேரினையும் உடையவனான அந்த நெடுஞ்செழியன், தன்னைப் பகைத்த எழுவரையும் வேரோடு அழித்து வென்றனன். அன்று, அந்த ஆலங்கானத்திலே எழுந்த வெற்றி ஆரவாரத்தினும், இன்று நம் ஊரிலே எழுந்த பழிச்சொல் பெரிது’ என்று கூறித், துயரத்திலே ஆழ்ந்து வருந்தாதிருப்பாயாக

நம்முடைய தலைவரான அவர், மதம்கொண்ட யானைகளையும் போர்வன்மையினையும் உடைய புல்லி என்பானது, மூங்கில்களை உடைய நீண்ட சாரல்களைக் கொண்ட வேங்கட மலைத்தொடர்களுக்கு அப்பாலுள்ள, குன்றுகளைக் கடந்து சென்றுள்ளனர். ஆனாலும்,

குருதி தோய்ந்து சிவந்த வேலினையும், வீரக் கழல்களையும், வீரவளையினையும் கொண்டவன், முள்ளுர் மன்னனாகிய காரி என்பவன். அவன், கெடாத நல்ல புகழினை இவ்வுலகிலே நிலைபெறுத்திய, வில்லாற்றலிலே வன்மையுடையவனான ஒரியைக் கொன்று, சிவந்த வேர்களையுடைய பலாமரத்தின் பயன் நிறைந்த அவனுடைய கொல்லிமலையினைச் சேரலனுக்குத் தந்தான். அந்தக் கொல்லிமலையிலே, நிலைபெற்ற தெய்வத்தச்சனால் நிருவிக்கப்பெற்ற, பலரும் புகழும் பாவை கொல்லிப்பாவை எனப்படும். அந்தக் கொல்லிப் பாவையைப் போன்ற நின்னுடைய அழகினைத் தம்முடைய உள்ளத்திலே நிறைவாகக் கொள்ளும் நிலையினைக் கடந்து, நின்னை நினையாதிருப்பவர் ஆதல், நம்தலைவர்பால் ஒரு போதும் இல்லையாகும்.

என்று, தலைமகனின் பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயினாள் என்க.