பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

அகநானூறு - மணிமிடை பவளம்


அதுபோலவே, அவள் காதலனை விரும்பிக் கவர்ந்த பிறிரினின்றும், தன்னை இழந்தாயினும், தான் மீட்டுத் தருவேன் என்றனள் தோழி.

பாடபேதம்: 2. நோய்க்கண்.

223. உறக்கம் ஏது?

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

(தலைமகன் பிரிந்து வினைமேற் சென்று வராதிருந்த காலத்தே, அதனால் வருந்தித் தன் அழகு குலைந்து வாடி மெலிந்தனள் தலைவி. அவளுக்குத் தலைவன் அவளை மறவான்’ என்ற உறுதியைக் கூறி, வற்புறுத்தித் தோழி தேறுதல் உரைக்கின்றான்.)

        ‘பிரிதல் வல்லியர்; இது, நத் துறந்தோர்
        மறந்தும்அமைகுவர் கொல்?” என்று எண்ணி,
        ஆழல்-வாழி, தோழி-கேழல்
        வளைமருப்பு உறழும் உளைநெடம் பெருங்காய்
        நனைமுதிர் முருக்கின் சினைசேர் பெருங்கல், 5

        காய்சினக் கடுவளி எடுத்தலின் வெங்காட்டு
        அழல்பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
        நிழலில் ஒமை நீரில் நீளிடை,
        இறந்தனர் ஆயினும், காதலர் நம்வயின்
        மறந்து கண்படுதல் யாவது-புறம்தாழ் 10

        அம்பணை நெடுந்தோள் தாங்கித், தும்பி
        அரியினம் கடுக்கும் எரிவனர் ஐம்பால்
        நுண்கேழ் அடங்க வாரிப் பையுள் கெட,
        நன்முகை அதிரல் போதொடு குவளைத்
        தண்நறுங் கமழ்தொடை வேய்ந்த, நின் 15

        மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே’

தோழி வாழ்க! நம்மைப் பிரிந்து செல்வதற்கு உள்ளத் தளத்திலே வன்கண்மை உடையராயினர் நம் காதலர். அவ்வாறே, நம்மைக் கைவிட்டுச் செல்லவும் செய்தனர். அத்தகையவரான அவர், நம்மை மறந்து அவ்விடத்தேயே தங்கியும் விடுவாரோ என்று எண்ணித் துயரத்தில் ஆழ்தல் வேண்டாம்.