பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

அகநானூறு -மணிமிடைபவளம்



        அகலா அந்துளை கோடை முகத்தலின்
        நீர்க்கியங்கு இனநிரைப் பின்றை, வார்கோல்
        ஆய்க்குழல் பாணியின் ஐதுவந்து இசைக்கும்,
        தேக்கமல் சோலைக் கடறோங்கு அருஞ்சுரத்து,
        யாத்த தூணித் தலைதிறந் தவைபோல், 10

        பூத்த இருப்பைக் குழைபொதி குவிஇணர்
        கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர,
        மழைதுளி மறந்த அங்குடிச் சீறுர்ச்
        சேக்குவம் கொல்லோ-நெஞ்சே!-பூப்புனை
        புயலென ஒலிவரும் தாழிருங் கூந்தல், 15

        செறிதொடி முன்கை நம் காதலி
        அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?

நம்மீது அன்பு கொண்டவள்; சிறந்த மடமையும் சாயலும் குணங்களும் பொருந்தியவள்; எலும்பையும் நெகிழச் செய்விக்கும் இனிதான பேச்சை உடையவள்; இப்படிப்பட்ட பிற சிறந்த குணங்களும் எல்லாம் ஒன்றுபட்டு இருக்கின்ற ஒரு குறிக்கோளுடையனவாக ஒருங்கே அமைந்திருப்பனபோல விளங்குபவள்; நம் காதலி. அவளுடன், தழுவியவாறே இன்று இவ்விடத்தில் இருப்பவர் ஆயினேம். நாளைப் பொழுதிலே,

அசையும் மூங்கில்கள் புதராகப் படர்ந்துவிளங்கும்; வண்டுகள் அவற்றிலே அழகியதாகச் சிறு சிறு துளைகளைப் பண்ணியிருக்கும்; கோடைக்காற்று அத்துளைகளினூடு புகுந்து ஒலி எழுப்பும்; அவ்வொலியானது, நீர் பருகுவதற்காகச் சென்று கொண்டிருக்கும் பசுமந்தைகளுக்குப் பின்னாக நீண்ட கோலினையுடைய ஆயர்கள் குழலினை இசைப்பதுபோல இனிதாக வந்து ஒலித்துக் கொண்டிருக்கும். அத்தகைய தன்மை உடையதாகவும்,தேக்கு மரங்கள் அடர்ந்தசோலைகளை உடையதாகவும் காடு விளங்கும். உயர்ந்திருக்கும், கடத்தற்கு அரியதான வழியாகவும் பாலைவழியானது தோன்றும். அவ்விடத்தே, மறவர்களின் தோளிலே கட்டியிருக்கும், அம்பறாத் தூணியினது மூடியைத் திறந்து வைத்திருப்பதுபோல, இருப்பை மரங்களின் பூக்கள் விளங்கும் தளிரால் பொதியப் பெற்றிருக்கும் குவிந்த அத்தகைய இருப்பைப்பூக் கொத்துக்கள் கோத்த நூலினின்றும் கழன்று வீழும் துளையுடைய முத்துக்களைப் போலச் சிவந்த நிலப்பரப்பிலே உதிர்ந்து கிடக்கும். மழை துளியிடுதலையே மறந்துவிட்ட அவ்விடங்களிலேயுள்ள, அழகிய குடிகளையுடைய சிறிய ஊரினிடத்தே,