பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 339



        பெருநீர்க் குட்டம் புனையொடு புக்கும்,
        படுத்தனம், பணிந்தனம் அடுத்தனம், இருப்பின், 10
 
        தருகுவன் கொல்லோ தானே - விரிதிரைக்
        கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
        தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
        கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?

நெஞ்சமே பொன் அடர்ந்திருப்பது போன்ற ஒளியுடைய கொத்துக்களாக விளங்கும் செருந்தியின் பலவான பூக்களைச் சூடியுள்ள, அழகு பொருந்திய கூந்தலை உடையவள், மணல் செறிந்துள்ள கடற்கரையிலேயுள்ள நண்டினை ஒட்டி விளையாடி அதனால் களைத்தவளாக இளைப்பாறி இருப்பவள்; ஆய்ந்த தொடியினை அணிந்துள்ள இளையவள். நலம் மிகுந்த சிறந்த பொருள்களை எல்லாம் மரக்கலம் நிறையக் கொணர்ந்து முலைவிலையாக நாம் கொடுத்தாலுங்கூட, நம்மால் அடையப் பெறுவதற்கு அவள் அரியவளே!

விரிந்த கடலின் கண்ணே இருந்து, திரண்ட முத்துக்களை எடுத்துக்கொண்டு வந்து, தேனுண்ணும் வண்டினம் ஒலித்துக் கொண்டிருக்கும் அகன்ற கரையினிடத்தே அவற்றைப் பகுத்துக் கொண்டிருக்கும், அழகிய கானற்சோலைகளையுடைய பெருந்துறைக்கு உரியவனாகிய தலைவன் அவளுடைய தந்தை.

நாம் வாழ்ந்திருக்கும் நாட்டினைவிட்டு நீங்கி இவ்விடத்தே வந்து, அவனோடும் கூடி, பெரிய கடற்கரையின் இடத்தேயுள்ள உப்புபாத்திகளிலே அவனுக்காகப் பணிசெய்து வருந்தியும் பெருங்கடலினிடத்தே ஆழத்தில் புணையோடு புகுந்தும், அவன் வயமாகியும், அவனைப் பணிந்தனமாகியும், அவனைச் சார்ந்தனமாகியும் இருப்போமானால், ஒருவேளை, அவன் அறத்தின் கூறு பாடுகளைத் தெரிந்தவனாக, அவனாகவே அவளை எமக்கு மணஞ்செய்து தருவானோ? (நெஞ்சமே! என் செய்வோம்?)

என்று, தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. அடர்ந்தன்ன செறிந்திருந்தாற் போன்ற 2. மலர் வேய்ந்த கூந்தல் மறையுமாறு மலர் சூடிய, 3 திணி மணல் செறிந்த மணல். அடைகரை - கடற்கரை. 4. அசையினள் தளர்ந்தவளாக 7. மதுஉப் பெயர்ந்து தங்குதலினின்றும் நீங்கிவந்து. 9. பெருநீர்க் குட்டம் - கடலின் கண்ணுள்ள ஆழமிகுந்த இடம்.12. கண்திரள் முத்தம் - கண்கள் திரட்சியுள்ள முத்துக்கள்; நன்குவிளைந்த நீரோட்டம் உடைய முத்துக்கள்.14 பரதவன் - நெய்தல் நிலத்தின் தலைவன்.