பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

அகநானூறு - மணிமிடை பவளம்



291. நினைத்தனையே நெஞ்சமே!

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை. துறை: பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தலைமகன் ஒருவன், தன் உள்ளத்திலே பொருளார்வம் மிகுந்தவனாகத், தன் அன்புடைக் காதலியையும் பிரிந்து தொலைநாடு நோக்கிச் சென்றான். இடைச் சுரத்திலே தன் காதலியின் நினைவினாலே வருந்திய அவன், தன் நெஞ்சிற்குச் சொல்லி வருந்தியது இது)

         வானம் யெல்வளம் கரப்பக், கானம்
         உலறி இலைஇல வாகப், பல உடன்
         ஏறுடை ஆயத்து இனம்பசி தெறுப்பக்
         கயன்அற வறந்த கோடையொடு நயன் அறப்
         பெருவரை நிவந்த மருங்கில், கொடுவரிப் 5

         புலியொடு பொருது சினஞ்சிவந்து, வலியோடு
         உரவுக்களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉப்பரல்
         சிறுபல் மின்மினி கடுப்ப எவ்வாயும்
         நிறைவன இமைக்கும் நிரம்பா நீள்இடை,
         எருவை இருஞ்சிறை இழிஇய, விரிஇணர்த் 1O

         தாதுஉண் தும்பி முரல்இசை கடுப்பப்,
         பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
         உவலை சூடிய தலையர், கவலை
         ஆர்த்து, உடன் அரும்பொருள் வவ்வலின், யாவதும்
         சாத்துஇடை வழங்காச் சேண்சிமை அதரச் 15
         
         சிறியிலை நெல்லித் தீம்சுவைத் திரள்காய்
         உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வுஇன்று,
         புள்ளிஅம் பிணை உணிஇய உள்ளி,
         அறுமருப்பு ஒழித்த தலைய, தோல்பொதி,
         மறுமருப்பு இளங்கோடு அதிரக் கூஉம் 2O

         சுடர்தெரு வருந்திய அருஞ்சுரம் இறந்து, ஆங்கு
         உள்ளினை வாழிய நெஞ்சே! போதுஎனப்
         புலம்கமழ் நாற்றத்து இரும்பல் கூந்தல்,
         நல்லெழில், மழைக்கண், நம் காதலி
         மெல்லிறைப் பனைத்தோள் விளங்கும்மாண் கவினே. 25

நெஞ்சமே! நீ வாழ்வாயாக!