பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3666

அகநானூறு - மணிமிடை பவளம்



(தலைவன் பிரிந்து வினைமேற் சென்றிருந்தனன். குறித்த பருவம் வரவும் தலைவியின் பிரிவுத்துன்பமும் மிகவும் அதிக மாயிற்று. அவள் உள்ளங் கலங்கிப் பெரிதும்- உடல் மெலிந்தவளாயினாள். அது கண்டு தோழி, பருவத்தின் வரவைக் காட்டி, சொல் தவறாது அவன் வருவான் என வற்புறுத்த, அவளுக்குத் தலைவி இப்படிக் கூறுகின்றாள்)

         மங்குல் மாமழை விண் அதிர்பு முழங்கித்,
         துள்ளுப்பெயல் கழிந்த பின்றை, புகையுறப்
         புள்ளிங்ண் துவலைப் பூவகம் நிறையக்
         காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
         நீர்வார் கண்ணின் கருவிளை மலரத், 5

         துய்த்தலைப் பூவின் புதலிவர் ஈங்கை
         நெய்தோய்த் தன்ன நீர்நனை அம்தளிர்
         இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
         அவரைப் பைம்பூப் பயில, அகல்வயல்
         கதிர்வார் காய்நெல் கட்டுஇனிது இறைஞ்சச் 10

         சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்,
         ‘காய்சின வேந்தன் பாசறை நீடி,
         நம்நோய் அறியா அறனி லாளர்
         இந்நிலை களைய வருகுவர் கொல்?’
         என ஆனாது எறிதரும் வாடையொடு 15

         நோனேன், தோழி! என் தனிமை யானே!

தோழி! மிகவும் இருண்ட மேகங்கள், விண்ணதிர முழங்கியவையாகத்துள்ளும் பெரும்பெயலையும் பெய்தன. அது கழிந்த பின்னர், புகைபோல நுண்மையான துவலைகள் பூக்களின் உள்ளளே நிறையுமாறு பனியாகப் பெய்து கொண்டிருக்கும் பனிக்காலமும் வந்தது.

தம் காதலனைப் பிரிந்துள்ள, செயலற்று வாடியிருக்கும் மகளிர்களின் நீர் வழியும் கண்களைப் போலக், காக்கணச் செடியிலே நீலப்பூக்களும் மலர்ந்தன.

பஞ்சு போன்ற தலையினையுடைய பூவினைக் கொண்டதும், புதர்களிலே படர்வதுமான ஈங்கையின், நெய்யிலே தோய்த்து எடுத்தாற்போல விளங்கும் நீர் நனைந்த தளிர்கள் இரு பிரிவாகப் பிளந்த ஈரலைப் போலப் பணித்துளியின் ஈரமுடனே விளங்கி அசைந்து கொண்டிருக்கின்றன.

அவரையும் பசுமையான பூக்களைப் பூத்துச் செறிவுடன் விளங்குகின்றது. அகன்ற வயல்களிலே கதிர்கள் நீண்ட