பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 75


இன்பமுடன் தங்கியிருக்கும். இவ்வாறு காடே அழகுபெற்று விளங்கும் தண்மையான செவ்வியை உடையது நாம் செல்லவேண்டிய பெரிய வழி. அதில் ஒடுகின்ற, செல்வதனால் மெலிவு கொள்ளாத, கொய்த பிடரி மயிரினையுடைய குதிரைகளின், கால்களிலே வந்து பொருந்துமாறு தாழ்ந்து தொங்கும் சதங்கைத் தண்டைகள் அசைந்து ஒலிக்கும்படியாகத் தேரைச் செலுத்துவாயாக

சீர்மை மிகுந்த முறைமையோடு, நம்மிடத்தே விரும்பிய கோட்பாட்டினை உடையவளான அந்தச் சிறந்த் பெண் அணங்கை நாம் விரைந்துசென்று அணுகுவோமாக ஆகவே, விரைந்து, தேரைச் செலுத்துக’ என்று, வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1.படுமழை பெருமழை ஒலித்தலையுடைய மழையும் ஆகும். பயம்- வளம் புறவு- காடு.2.அவல்-பள்ளங்கள். பகுவாய் - பிளந்த வாய். 3. சிறு பல்லியம் - சிறய அளவான் இசைக்கும் பல்வேறு இசைக் கருவிகளும் ஆம். 4. குறும் புதற் பிடவு - குறுகிய புதராகப் படர்ந்து கிடக்கும் பிடவு. அலரி - அலர்ந்த மலர். 5. அயிர் - நுண் மணல்; மழைபெய்து வடிந்த காலத்தே தோன்றுவது. 6. பை யணந்தன்ன - படம் மேனோக்கி இருந்தாற்போன்ற, 7. தண்கமழ் - தண்மையான மணம் கமழ்தல். கோடல் - வெண்சங்கு. 8. அறல் - அறல்நீர், 9. காமர் துணை - விருப்பமுடைய துணை.ஏமுற-இன்பமுற12.தாள்தாழ்தார்மணி - குதிரைகளின் கழுத்திலே அவற்றின் கால்கள்வரை நீண்டிருக்குமாறு மாலைபோல விளங்கும் மணி.அம்மா அரிவை - அம்ம’ அசைச் சொல்லும் ஆம்: ‘அரிவை பெண்களின் பருவத்தைக் குறிக்குஞ் சொல்; அவன் காதலியை இங்கே குறித்தது.15. துன்னுகம் - நெருங்குவோம்.

பாடபேதங்கள்: 6. பையணர்த்தன்ன. 9. காமர் பிணை யோடு, 12 தயங்குபு இயம்ப. 13. பரிந்த கொள்கை

155. செய்வினை முடித்து வருக!

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது. சிறப்பு: பாண்டி நாட்டின் வளம்.

(தலைமகன் பிரிந்து சென்றவன் வந்து அருளாதது குறித்து உள்ளம் வருந்தி வாடினாள் தலைமகள். தன் வேதனையைத் தன்னுடைய தோழியிடம் கூறி இப்படிப் புலம்புகிறாள்.)