பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 107


'உயரிய புகழ் வாய்ந்தவள் கானமர் செல்வியாகிய கொற்றவை; அவள் அருள் செய்தலினாலே, வெண்மையான கால்களையும், பலவான படைகளையும் உடைய குதிரைகளை அடைந்தனன், பழையதான புகழினை உடையோனாகிய, மிகநுண்மையான செறிவுடன் கூடிய செய்யுட்களைச் செய்வோனாகிய புலவன் ஒருவன் அப்புலவனால் பாடப்பெற்ற சிறப்பினைக்கொண்டது ஏழிற்குன்றம், மேகக் கூட்டங்கள் படிகின்ற அந்த ஏழிற்குன்றத்துள்ள கரிய அடியினைக்கொண்ட வேங்கைமரத்தினது சிவந்த பூக்களாலே தொடுத்த பிணையலை, அழகிதாக உயர்ந்த நின் அல்குலிடத்தே அணிந்து மகிழ்வோம்; சில நாட்கள் செல்வதாக, என்றுகூறி முன் காலத்து நம்முடன் பொய்ம்மை கூறி, இப்போது பிரிந்து சென்றவர் நம் தலைவர், ஆயினும்

அசையும் காற்றிற்குத் தளர்கின்ற தன்மையுடைய இற்றி மரத்தின் ஒன்றாகத் தனித்த நெடிய விழுதானது; பாறையிடத்தைத் துடைத்திருக்கும் காட்டு வழியிலே பொருந்திய வெயிலினாலே, நிழலிடத்துத் தங்கியவராக நம் காதலர் செல்லுவதற்கு உதவியாகவும்,

தம்முடனே, வரும் திருந்திய வேலினை ஏந்தியோரான வீரரும், வண்டுகள் உண்ணுமாறு அணிந்து கொள்ளுதற்குத் தக்கதாகவும்,

சிறந்த தளிர்களை ஈன்றவாக மரக்கொம்புகள் தளைத் திருக்கும்படி மழையும் பெய்து நீங்கி, வானமும் வறண்ட பின்பு, குன்றிடத்தவாகிய சிறிதான வெள்ளிய அருவிகளின் நீர்த்துவலையினாலே மலர்ச்சி பெற்ற, கருத்த அடியினையுடைய நுணாமரத்தின் பெருத்த கிளைகளிற் பூத்த வெண்மையான பூக்கள், சிவப்பான மணலையுடைய சிறிதான வழியிடங்களில் எல்லாம், 'கம்'மென மணம் நிறைத்து அழகு செய்யக்காடும் அழகுபெற்று விளங்குமாக!

சொற்பொருள்: 1. தளி - மழை. 2. தண்பதம் - நிலம் குளிர்ந்த தன்மை, 4. கானமர் செல்வி - காடுகிழாள் கொற்றவை. 5. படை - சேணம். இசை - புகழ் 6. நுணங்கு நுண் பனுவல் - மிக நுண்ணிய கருத்துக்களைக் கொண்ட திட்பமான நூல். 7 இனமழை - மேகத்திரள். 9. ஐது ஏந்து - அழகிதாக உயர்ந்த 12. மலைமார் - அணிதலின் பொருட்டாக. 13. முறி - தளிர் 14. உறை - மழை. 15. துவலை - அருவியின் மென்துளிகள், 16. நுணவு - நுணாமரம். வரிப்ப-அழகு செய்ய.19. ஒல்குநிலை-தளரும் தன்மை.20.சீக்கும் - துடைக்கும்.