பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

அகநானூறு -நித்திலக் கோவை


நிலத்தை சுற்றியுள்ள காட்டைச், சுடுவதனால் விளங்கும் புகை எழும். அப்புகை அவனுடைய மலையிடத்தே வீழும் அருவியின் துவலையோடு விரவித் தோன்றும், பெருமலை பொருந்திய அத்தகைய காட்டு வழியே சென்றோர் நம் தலைவர்.

அவர், வானவரம்பனது 'வெளியம்’ என்னும் ஊரினைப் போன்றதான நம்முடைய மாண்புற்ற நலத்தையெல்லாம் தம்முடனே கொண்டு சென்றுவிட்டனரே! "(இனி அவர் மீண்டும் வராதபோது அந் நலம் எங்ஙனம் என்னை வந்து அடையும்? என்பது கருத்து.)

சொற்பொருள்: 1. பனிவார் உண்கண் - துளிகள் வழியும் மையுண்ட கண்கள். 2. சாஅய - வாட்டமுற்ற. 3. கரந்தனம் உறையும் - மறைத்தேமாக வாழும். 5. கையறுதல் - செயலற்றுச் சோர்தல்: இகுளை - தோழி 6. வானவரம்பன் - சேரன் புகழின் உயர்ச்சிக்கு வானத்தையே எல்லையாக உடையவன் என்பது பொருள். 7. முனாஅது - முற்பக்கத்து. 8. அசைஇய -தயங்கிய கோடியர், கூத்தர் 9. இயம் - வாச்சியம்; அதன் ஒலியைக் குறித்தது. 10. வீழ் பிடி - விரும்பப்படும் பிடி 11, சூர் புகல் - அச்சமுடைத்தாகச் சொல்லத்தக்க; சூரர மகளிர் வாழ்தலையுடைய. 14. முதைச்சுவல-பழை கொல்லை. குரு உப்புகை-நிறம் விளங்கும் புகை. 15. துவலை - சிறுதுளி; தூவானம் என்பர்.

விளக்கம்: துயரத்தின் மிகுதியால் நீர்வடியும் கண்ணினளாகவும், பசந்த தோளினளாகவும் நாளுக்குநாள் வாட்ட முற்றும், அதனைப் பிறர் அறியின் தலைவனைப் பழிப்பார்களே என்ற எண்ணத்தால் பிறர் அறியாதபடி மறைத்தவளாக வாழ்கின்ற தலைவியின் கற்புச்செவ்வியை அறிக. காதலன் உடன் இல்லாது போயினும், இப்படி அவனுக்குப் பழி ஏற்படாதவாறு கரந்தொழுகும் பண்பினைக்கூட அவன் அறிந்தானில்லையே என நோகின்றவள், கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் நீடினர்’ என்கின்றனள். இதனால், தம் வாட்டத்தின் எல்லைக்கண்ணும், தம் தலைவனுக்குப் பழி நேராது காக்கும் தமிழ்ப் பெண்மையின் செவ்வியை அறிந்து போற்றுக.

பிரிவினால் நலன் அழிந்தவாளை, மாணலம் தம்மொடு கொண்டனர் எனத் தலைவன் பிரிவினால் தான் ஆற்றியிருக்க நினையினும், இயலாத தன் உள்ளத்தைச் சொல்லிய தகைமையினை அறிந்து உணர்க.

கூத்தரின் வாச்சிய முழக்கத்து எதிரொலி பெருமலை யுச்சிகளினும் எதிரொலிப்பதுபோல, வானத்து இடிமுழக்கமும், பிடிகெடுத்த களிற்றி பிளிற்றொலியும் மாறுமாறு எழுந்தன.