பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

அகநானூறு - நித்திலக் கோவை



தோழி! வாழ்க! யான் சொல்வதனை மனம் பொருந்திக் கேட்பாயாக;

கல்லென்னும் ஒலியுடனே மேகக்கூட்டங்கள் மழையினைப் பொழிந்த, கானமும் ஒலியடங்கிப் போயிருக்கும் நள்ளிரவு வேளையிலே, தினைப்பயிரை மேய்ந்த யானைக்கூட்டங்களும் நிலைகெட்டவாய் ஒடுமாறு, மலையிடத்தே உயர்ந்த பரணின் மீதிருந்து கானவன் வீசி எறிந்த வலிய விரைவமைந்த கல்லின் கடுமையான ஓசையும் ஒல்லென எழுந்தது. அது கேட்டுத் தறுகண்மையினையுட்ைய புலியும் முழக்கமிட்டது. யானைகள் கதறின. அகற்சிகொண்ட காட்டிடத்தேயுள்ள அழகிய மயிலும் இடியோசையென மயங்கி ஆடத் தொடங்கின. இங்ஙனம், மலையிடத்து விலங்கினம் அனைத்தும் வெருவுகின்ற பெரிய கற்களையுடைய நாட்டிற்கு உரியவன் இத் தலைவன்.

காட்டினிடத்தே, விரும்பப்படும் தன் பிடியானையினை இழந்த, தொங்குதலையுடைய நீண்ட பெருத்த கையினைக் கொண்ட வெண்மையான கோட்டினையுடைய ஆண் யானையானது, உண்ணுதற்கான தழையினையும் உண்ணாது வெறுத்த வாட்டத்தைப் போன்ற தன்மையினையுடைய தன்னுடைய உடலின் சிதைவினை நன்கு அறிந்தும், நம்பால் இரந்து பின்னிற்றலை வெறானாகி நின்றனன் அவன்.

‘மிகுதியான பொன்னினாற் செய்த பாவையினைப் போன்ற அழகினையும், விரும்பப்படுகின்ற மென்மைத் தன்மையினையும் உடைய, மடப்பம் வாய்ந்த தலைவியினிடத்தே, தீங்கு எதுவும் இல்லையாகும்படிக்கு நீ புணையாக என் பொருட்டுப் புகுவாயாக’ என்று கூறி என்னையும், வேண்டினனாயினன் அவன். அவன் அழிந்து போகுமாறு கைவிட்டுச் செல்லல் நமக்கு மிகவும் துன்பந்தருவதேயாகும்.

ஆயின், அவன் நம்மைவிட்டு அகல்வானோ என்றால், அவன் நம்மைப் பிரிந்தவன் ஆதலே அரிதாகும்.

அஃதன்றியும், தனக்கு உரித்தானதல்லாத பண்பினோடும் கூடிப் பிரிவானாயின்,

போர்ச்செயல் ஒழிய நீங்கிய வெற்றி வேலினையுடைய வேந்தனானவன், போர் முனையினைக் கொன்றுவிடக்கூடிய படையுடனே முற்புறம் வந்து முற்றுகையிடத் தன் எல்லை யாகிய நிலைத்த அரணையுடைய இருக்கையானது எதிர்த்து நிற்க ஆற்றாமையினாலே, விரும்பத் தக்கபடியே ஓங்கிய மூங்கில்கள் செறித்திருக்கும் மலைப்பக்கத்தாகிய காட்டிலே தங்கியிருந்து, தான் கைக்கொண்ட வேலின் வலிமையினது தோற்றம் பிழைபடாத தொன்மையான புகழினை மீண்டும்