பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 217



மிகவும் வள்ளன்மை உடைய தலைவனே!

களாவும் காய்த்துப் பழுத்துப் பழங்கள் புளிப்புச் சுவையினை உடையவும் ஆயின. விளாமரங்களும் பழங்களுடன் விளங்குகின்றன.

சிறிய தலையுடையவான செம்மறியாட்டினது பழுப்பு நிறம் அமைய முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின், குத்துதலாலே மாட்சியுற்ற அரிசியோடு, கார் காலத்து மழைபெய்து நீங்கிய ஈரமான வாயிலையுடைய புற்றினிடத் திருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் பெய்து சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைச், செவலைப் பசுவின் வெண்ணை யானது அதன் வெப்பமான புறத்தே இட்டுக் கிடந்து உருகிக்கொண்டிருக்க, நின் ஏவலாளர் அருந்துவர்.

அதன் பின்னர், நீயும் -

முள்ளிட்ட வேலிகொண்ட இடத்திலே, வளைந்த கால்களையுடைய பந்தரின் கீழே, புதுக்கலத்தைப்போலச் செம்மண் பூசப்பெற்று விளங்கும் சிறு வீட்டிலே, புனையப் பெற்ற கருமையான கூந்தலையுடைய நின் மனைவியானவள் நினக்கு விருந்து ஊட்டுமாறு, பால்பெய்த சோற்றினை உண்ணுதற்காக, ஒருநாள் வந்து போவாயாக

காட்டு வாழ்க்கையினனான இடையன், தன் யாட்டினங் களைக் கிடைபெயர்க்கும், வாய்மடித்து எழுப்பும் சீழ்க்கை யொலியினைக் கேட்டு அச்சமுற்ற குறுமுயலானது, மன்றத்தின் கண்ணுள்ள பெரிய புதரிலே மறைந்துகொள்ளும் முல்லை நிலத்தின் கண்ணுள்ளது, எம்முடைய சிறிய நல்ல ஊராகும். (அதனிடத்து வந்து போவாயாக என்பது கருத்து)

சொற்பொருள்:1.களவு - களாம்பழம். விளவு-விளாம்பழம். 2. சிறுதலைத் துரு - சிறுத்த தலையினையுடைய செம்மறியாடு. 3. அவைத்தல் - குற்றுதல். 4. புற்றம் - எறும்புப் புற்று. 5. வெம் சோறு சூடான சோறு; விருப்பந்தரும் சோறுமாம். 6.சேது ஆன் - சிவந்த பசு, 8. முடக்காற் பந்தர் - வளைந்த கால்களையுடைய பந்தர். 9. செவ்வாய் - செம்மண் பூசிய இடத்தையுடைய, 11. பாலுடை அடிசில் - பாற்சோறு. தொடீஇய உண்ணும் பொருட்டாக, 13 தலைபெயர்த்தல்- கிடைபெயர்த்தல்.14. வீளை - சீழ்க்கையொலி.16. புன்புல வைப்பு - முல்லைநிலப் பகுதி.

விளக்கம் : 'களவும் புளித்தன. விளவும் பழுநின என்றது புளிச்சோறு ஆக்குதற்கு அவற்றைப் பயன்படுத்தலாம் என்றதாம். களவு வாழ்க்கை எமக்குப்புளித்துப் போயிற்று மண விழவுக்குத் தகுந்த பொழுதும் கனிந்துள்ளது' என்ற கருத்தும்,