பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

அகநானூறு - நித்திலக் கோவை



பிற்சேர்க்கை - 1.

பாடினோர் வரலாறு
(நகவளைவுக்கு உட்பட்ட எண்கள்
இந்நூற்செய்யுட்களின் எண்கள் ஆகும்)

அஞ்சியத்தை மகள் நாகையார் (356)


தகடூர்க்கு உரிய மழவர் கோமானாகத் திகழ்ந்தவனும், மாவீரனும், வள்ளலும், ஒளவையாரின் அன்புக்குரிய நட்பினனாகத் திகழ்ந்தவனுமான அதியமான் நெடுமான் அஞ்சியின் அத்தை மகளாகத் திகழ்ந்தவர் இந்த அம்மையார். தமிழன்பு மிகுந்து தமிழ்ச்சான்றோரைப் பேணிப் புரந்துவந்த அதியர் குடும்பத்திற் பிறந்த இந்த அம்மை, தமிழ்ப்புலமை உடையவராகவும் விளங்கினார். இந்நூலினுட் பயின்றுவரும் பாடலின் கண்ணும், அஞ்சியின் புகழுடைமையை இவர் போற்றிப் பாடியுள்ளதனை அறிந்து இன்புறுக. 'குடி நன்குடையன், கூடுநர்ப் பிரியலன், கெடுநா மொழியலன், அன்பினன்' என்று இவர் உரைக்கின்ற காதலனின் சிறப்புக்கள், ஒவ்வொரு கன்னியும் அடைய விரும்புகின்ற லட்சியக் காதலனை நன்கு உருவகிப்பதனைக் காணலாம்.

அதியன் விண்ணத்தனார் (301)

விண்ணத்தனார் என்னும் இயற்பெயருடைய இவர், அதியர் குடியினரைச் சார்ந்தவராக, நற்றமிழ்ப் புலமை உடையவராக வாழ்ந்தவர் எனலாம். இந்நூலின்கண் வரும் செய்யுள், இவருடைய புலமைத் திறத்தையும், மக்களின் வாழ்வியலை ஊடாடிக் கண்டு நயம்பட உரைக்கும் சிறப்பையும் காட்டுவ தாகும். தலைவனாற் கைவிடப்பெற்று வாடியிருக்கும் தலைவியின் பொலிவிழந்த நிலைக்கு, முதல்நாள் கூத்து நிகழ்ந்து ஆரவாரத்துடன் பொலிவுற்று விளங்கிய மன்றம், பிற்றை நாளில் பொலிவிழந்து தோன்றும் நிலைக்கு ஒப்பிட்டுக் கூறும் நயத்தினை அறிந்து இன்புறுக.


அம்மூவனார் (370, 390)

'அம்மூ' என்னும் பெயரமைதியினால் , இவரைச் சேரநாட்டைச் சார்ந்தவராகக் கருதுபவர் பலர். சேரமான், பாண்டியன், மலையமான் முதலியோரால் ஆதரிக்கப்பெற்று. அவர்தம் தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடியவர் இவர். சங்கத்தொகை