பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

அகநானூறு - நித்திலக் கோவை


குரிய காரணத்தையும் இச்செய்யுளாசிரியர் காட்டுவது மிகவும் நயம் உடையதாகும்.

எவ்வி (366)

சோணாட்டுத் திருவீழிமிழலையும் திருநீடூரும் உள்ள டக்கிய பகுதியின் தலைவன் இவன். குடவாயிற்கீரத்தனார், வெள்ளெருக்கிலையார் ஆகியோரால் போற்றப்பெற்றவன். அன்னி யென்பவன் அழுந்துர்த் திதியனுடன் போரிடத் துணிந்தபோது, அதனைத் தடுக்க முயன்று, அவனுக்கு நன்மொழி கூறியவன். அரிமணவாயில் உறத்துார் ஆகிய ஊர்த் தலைவர்களை அழித்தவன். தலையாலங்கானப் பெரும்போரில் பாண்டியை எதிர்த்து அழிந்தவர்களுள் இவனும் ஒருவன் ஆவான். இவனுர் வளமுடையது எனவும், யாழிசைக்குப் பேர்போனது எனவும் உரைப்பர். இச்செய்யுள், இவனுர்க்கண் துளையரும் களமரும் கைபிணித்துச் செய்த பூசலையும், அதனைத் தடுத்து நிறுத்திய நரைமூதாளரின் தன்மையினையும் உரைக்கின்றது.

கணையன் (386) சேரர் படைத்தலைவருள் ஒருவனாகக் கழுமலப் போருள் வீழ்ந்துபட்டவன் இவன். இச்செய்யுள் பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி, எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த திறன்வேறு கிடக்கையினை நோக்கிய இவன், நாணமுற்று நின்ற செய்தியைப் பரணர் வாய்மொழியாகக் கூறுகின்றது.

கடல்கெழு செல்வி (370)

கடற்கரைத் தெய்வமாகக் குறிக்கப்பெறும் தெய்வம் இவள். இவளைப் போற்றி வழிபடுவது நெய்தல் நிலத்தார் இயல்பு. இச்செய்யுள் கானற்கண் தனித்து நிற்கும் தலைவியை, 'கடல்கெழு செல்வி கரைநின்றாங்கு' என உரைக்கிறது.

கரிகால் வளவன் (376)

சோழன் கரிகாற் பெருவளத்தான் என்ற சிறப்புடன் திகழ்ந்தவன் இவன். பொருநராற்றுப் படைக்கும் பட்டினப் பாலைக்கும் பாட்டுடைத் தலைவன். சேரமான் பெருஞ் சேரலாதனைக் களத்தில் வென்றவன். கருங்குழலாதனார் வெண்ணிக் குயத்தியார், கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆகியோராற் பாடப்பெற்றவன். 'செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்’ எனவும், வெண்ணிவாயில் என்னுமிடத்தே பதினொரு வேளிரோடு இருபெரு வேந்தரையும் வென்றவன் இவன் எனவும் உரைப்பர். இவன் வரலாறு சிறப்பு வாய்ந்தது; மிகவும் விரிவானது.