பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அகநானூறு - நித்திலக் கோவை


மனையிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இடமாகிய, கற்கள் உயர்ந்த பக்கமலைகளையுடைய வழியினைக் கடந்து சென்றவரான அவர், நம்பால் அருள்புரிந்தவராக மீண்டும் வந்து விடுவார், காண்பாயாக!

சொற்பொருள்: 1. பிறிது - இணைந்த இன்பத்தினும் பிறிதான பிற ஓரின்பம்: அன்றி இனிப் பிரிவாகிய பிறவும் ஒன்று உண்டோ எனலும் ஆம். 2 அணிக்கவின் அணியாக விளங்கும் கவின், கவின்-மேனியின் ஒளி.4.பனி-துன்பம்; கண்ணிரும் ஆம். 5. ஐயவாக மெல்ல மெல்ல; இது பெருமூச்சு விடுவதற்கும் வலுவிழந்துபோன நிலையினைக் குறிப்பதாம். 6. எல்லை பகல், 7. படர் - துன்பம். அட வருத்த 7 நுங்குதல் - விழுங்குதல். 9. புரிந்து - விரும்பி. 11. நிதியஞ் சொரிந்த நீவி - நிதியத்தைத் சொரிந்து போட்டிருக்கும் துணிப்பை: இது நீண்டதாக அரையிற் கட்டிக்கொண்டு செல்லும் பணப்பை ஆகும். 12 ஊன் தேம்பும் உடல் வாடிக் கிடக்கும். 14 வசிபடு புண் - அம்பினாற் பிளக்கப்பட்ட புண். 17 பிறங்கல் - பக்க மலை.

விளக்கம்: பாலையின் வெம்மை மிகுதியைப், "பாம்பூன் தேம்பும் ‘வறங்கூர் கடம்' என்பதனால் பெறவைத்தனர். 'வம்பலர் அம்பினாற் றுளைப்பட்டு வீழவும், அவருக்கு இரக்கங் காட்டாது, அவருடற் புண்ணினின்றும் வழியும் குருதியை . மாந்திக் குரலும் குறைந்துபோன கொடிய காக்கையும் இல் வழிப்படுஉம் மலை என்றது, அதுவும் தன் துணையை நாடிச்சென்றது என்பதாம். அதற்கே மாலையில் வீடு திரும்பும் எண்ணமுள்ள போது, அருளுள்ள அவர், அன்பராய அவர், திரும்பி வருவாரோ? எனக் குறிப்பினால் தேற்றியதும் ஆம். 'ஒற்றுச் செல்பவர் ஒடுங்கிய குரலினராயிருப்பர்’ என்று கூறுகின்ற தன்மை விளக்கத்தைக் கண்டு இன்புறுக. ஒற்றர், தம்மைப் பிறரறியாதவாறு செய்தி சேகரிக்க வேண்டியவராதலின், உரத்துப் பேசுதலின்றி, ஒடுங்கிய குரலிலேயே பேசுவர் என்பது தெளிவு. இதனையே மிகவும் உண்டு குரலும் குறைந்த காக்கையின் கரைதலுக்கு ஒப்பிட்டனர்.

நீங்கா வம்பலர் இடையறாது வழிச்செல்வோராகிய புதியவர். புதியவர், அந்த வழியிடத்திற்கு என்க.

மேற்கோள்: தொல்காப்பிய உவம சூத்திரத்து உரையில், 'குளித்துப் பொரு கயலிற் கண்பனி மல்க' என்பது, உவம உருபினறி இன்னுருபு தன் பொருட்கண்ணும் வந்ததாகும் என்று காட்டி உரைப்பர் நச்சினார்க்கினியர்.