பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 41


ஓங்குசினை நறுவி கோங்கலர் உறைப்பத்
துவைத்துஎழு தும்பி தவிர்இசை விளரி
உதைத்துவிடு நரம்பின் இம்மென இமிரும்
மரனே முற்ற காமர் வேனில்

வெயிலவிர் புரையும் வீததை மாஅத்துக்
15

குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லை கொல்லென மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தன மாகநயந் தாங்கு

உள்ளிய மருங்கின் உள்ளம் போல
20

வந்துநின் றனரே காதலர் நத்துறந்து
என்னுழி யதுகொல் தானே பன்னாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன்னுதற் பாஅய பசலை நோயே?

பெரிதான வானத்தினிடத்தே மேகங்கள் பெய்தலாகிய தம் தொழிலினை நிறுத்தியவாயின. பரப்பிவைத்தாற் போன்ற இருளினைப் பகலினும் பரப்பியதாக வானமும் விளங்கியது. புகையின் நிறத்தைப்போன்ற உருவினைக் கொண்டு அங்ஙனம் மேகங்கள் விளங்கும் பனிக்காலமும் நீங்கியது.

கூர்மையான பற்களையும் ஒளியுடைய முகத்தினையும் உடைய இளம்பெண்களது, செம்பஞ்சி ஊட்டிய நகத்தினைப் போன்று விளங்கும், குவிந்த முகைகளையுடைய முருக்க மரத்தினது கூரிய முனையையுடைய முதிர்ச்சிபெறாத பல இதழ்களும் உதிரும் படியாக, மலரிடத்துத் தேனுண்ணும் வேட்கையினவாகிய வண்டினம், கூட்டமாகப் பாய்ந்து கிண்டி அவற்றை உதிர்த்துக் கொண்டிருக்கும்.

பொன்னாற் செய்த சிறு தராசுத்தட்டு அழகு பெற, வெள்ளியின் நுண்ணிய கம்பி அறுத்தலால் குறைப்பட்டு உதிர்வனபோல, ஒலியுடைய வண்டினம் ஊதுந்தோறும், கோங்கமரத்தின் பூவிடத்தே, குரவமரத்தின் உயர்ந்த கிளையிடத்து நறும்பூக்கள் குறைந்து உதிர்வனவாயிருக்கும்.

ஆரவாரித்து எழுகின்ற வண்டின் விட்டுவிட்டிசைக்கும் ஒலியானது தெறித்துவிடுகின்ற விளரி நரம்பினிடத்து நின்று எழுகின்ற ஒலிபோல இம்மென ஒலித்துக் கொண்டிருக்கும்; மரங்களும் இன்பமுற்றனவாக விளங்கும் அத்தகைய அழகிய வேனிற்காலத்திலே