பக்கம்:அகமும் புறமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 • அகமும் புறமும்

காட்டுவதன் மூலம் தலைவனுக்கு அறிவு கொளுத்த முடிவு செய்துவிட்டாள்.

நேரடியாக ஒன்றைக் கூறுவதைக்காட்டிலும் மறைமுகமாகக் கூறுவது எளிது. அவ்வாறு கூறுவதிலும் நகைச்சுவை தோன்றக் கூறுவது இன்னும் நலம் பயக்கும். ஆனால், நகைச்சுவை ததும்பப் பேசக்கூடிய நிலையிலா தலைவி இருக்கிறாள்? எல்லையற்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் அவளால் சுவைபடப் பேசல் இயலுமா? பேச முடியும் என்று 'சுவை இயல்' ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒவ்வொருமுறையும் ஒருவன் நகைச்சுவை ததும்பப் பேசும் பொழுதும் சிரிக்கும் பொழுதும் ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். அவனுடைய உணர்ச்சிகளை ஆழ்ந்து நோக்கினால் கண்ணிர் வரவழைக்கும் ஒரு நிலையிலிருந்தே இந்த நகைச்சுவை தோன்றிற்று என்பதை அறிய முடியும்? இவ்விலக்கணத்தைத் திருப்பி வைத்துப் பார்த்தாலும் இதில் உண்மை இருப்பது விளங்கும். எல்லையற்ற துயரம் தோன்றிய பொழுதும் சிரிப்பும், சிரித்தற்கு ஏற்ற பேச்சும் தோன்ற இடமுண்டு என்பதை அறிய முடிகிறது. [For, in every case in which a man laughs humourously there is an element which, if his sensitivity were sufficiently exaggerated, would contain the possibility of tears. - The Sense of Humour by Max Eastman. P.21.] மேலே கூறப்பெற்ற தலைவிக்கு எல்லையற்ற வருத்தத்தினாலேதான் நகை ததும்பப் பேசும் வாய்ப்பு ஏற்படுகிறது.

நகைச்சுவையுடன் வரும் பேச்சு ஏதாவது ஒரு காரணம் பற்றியே தோன்றல் கூடும். அக்காரணத்தை ஆய்ந்த திறனாய்வாளர் இவ்வாறு கூறுகின்றனர்; நகைப்பேச்சு என்பது வைரம் போன்ற ஒளிபடைத்த ஓர் அனுபவமாகும்; விளையாட்டில், எதிர்பாராமல் தோன்றிய அதிர்ச்சியோ, ஏமாற்றமோ (அது மனத்திருப்தியை உண்டாக்குவதாயின்) தோன்றும் பொழுதுதான் இந்த