பக்கம்:அகமும் புறமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 117


இத்துணைப் பெருமை வாய்ந்த அருவி, சுனை முதலியவற்றையுடைய மலைக்குத் தலைவன் அவன்; நம்மைப் போன்ற மனிதன்தான். எனவே, அவனுக்கும் நம்மைப் போலக் காதல் முதலிய உணர்ச்சிகள் உண்டல்லவா? அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளும் அந்த மலையை அடுத்த சிற்றூரில் வாழ்ந்து வருகிறாள். நீண்ட நாளாகவே அவனுக்கும் அவளுக்கும் நட்பு உண்டு. ஆனால், பிறர் அறிய மணந்து வாழும் நிலைமையை அவர்கள் இன்னும் அடையவில்லை. ஆனால், ஒருவர் இன்றி மற்றவர் வாழ முடியாது என்று கூறும் அளவுக்குக் காதல் கொண்டவர்கள். அவன் ஏறத்தாழத் தினம் ஒருமுறை சென்று தலைவியைக் கண்டு, அவளுடன் மகிழ்ந்துவிட்டு வருவான். அப்பொழுதெல்லாம் அவளும் வீட்டில் தங்கவில்லை. அவள் வீட்டை விட்டுச் சற்றுத் தூத்தேயுள்ள தினைப்புனத்தைக் காவல் காத்து வந்தாள். அவளும் அவளுடைய உயிர்த் தோழியும் சேர்ந்து புனத்தில் காவல் காத்து இருந்தமையின், வேறு ஆடவர் துணை இல்லாமல் இருந்தது, தன்லைவன் முதன்முறை தலைவியைச் சந்தித்த பொழுது, தோழிக்குத் தெரியாமலே சந்தித்தான். ஆனால், முதற் கூட்டம் முடிந்த பிறகே, தோழியின் தயவு இல்லாமல் தாம் இருவரும் நீண்ட காலம் இவ்வாறு களவுப் புணர்ச்சியில் இருக்க முடியாது என்பதைக் கண்டு கொண்டான். எனவே, மறுமுறை தோழியைச் சந்தித்துக் குறிப்பால் தன்னுடைய காதலை அவளிடம் கூறித் தலைவியைத் தான்சந்திப்பதற்குத் தோழியின் சம்மதியைப் பெற்றுவிட்டான்.

தடைஇல்லாமல் நீண்டகாலம் அனுபவிக்கக் கூடியது என்ற இன்பம் ஒன்றும் இந்த உலகில் இல்லை. ஆதலால், தலைவனுடைய இன்பத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பது போலத் திணைக்கதிர்கள் நன்கு முற்றி அறுவடையாகி விட்டது. திணைப்புனத்தில் வேலை முடிந்தவுடன்