பக்கம்:அகமும் புறமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 • அகமும் புறமும்

தொழிலைச் செய்யாமல், என் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதுவே நோயாக இருந்து இறந்து போவேனாயின், அது எவ்வளவு நன்மையாக இருக்கும்! அகன்ற பெரிய ஆகாயத்திடத்தே இராகு விழுங்கிய பசிய கதிர்களை உடைய நிலவைப் போலக் கூந்தலுடன் விளங்கும் நெற்றியையுடைய தலைவி யான் நினைக்குந்தோறும் என் எதிரே வந்து வினாவி என்னை மெலியச் செய்கிறாள். அதனால் எனக்குக் காமநோய் மிகுதியாகி இருக்கிறது!" என்ற கருத்துடன் பாடல் அமைகிறது.

மடல்மா ஊர்ந்து மாலை சூடிக்
கண்அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்
பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று
அதுபிணி ஆக விளியலங் கொல்லோ?
அகல்இரு விசும்பின் அரவுக்குறை படுத்த
பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல
அளகம் சேர்ந்த சிறுநுதல்
கழறும் மெலிக்கும் நோய்ஆ கின்றே!

(நற்றிணை–377)

(மடல்மா–பனங்கருக்கால்; செய்த குதிரை, கண் அகன் வைப்பு–இடம் அகன்ற பூமி; ஒண்ணுதல்–ஒளி பொருந்திய நெற்றி, அரிவை–தலைவி, பண்ணல் மேவலம் –அலங்கரித்துக் கொள்ளலை விரும்பேம்; விளியலங் கொல்லோ–சாகமாட்டோமா அளகம்–கூந்தல்; கழறும் – இடித்துக்கூறும்.)

இவ்வழகிய பாடலின் இறுதி நான்கு அடிகளிலும் தலைவியின் அழகைக் கூறுகிறான் தலைவன். ஆனால், அவ்வாறு கூறுமுகமாகவே அவளிடத்தில் தான் கொண்டுள்ள தணியாக் காதலையும் வெளியிட்டு விடுகிறான். 'மடலேறித்தான் நான் இறக்க வேண்டுமா? அது இல்லாமல் இந்தப் பாழ் உயிர் போகவும்