பக்கம்:அகமும் புறமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 167

தேரைச் செலுத்துகிறான். என்றாலும் என்ன! தலைவனுடைய மனம் செல்லுகின்ற வேகத்துடன் ஒப்பிட்டால், வேகமாகச் செல்கின்ற குதிரைகள்கூட ஓடாமல் மெள்ளச் செல்வது போலக் காட்சியளிக்கின்றன. அவனுக்கு. எனவே, பாகனை நோக்கிப் பேசுகிறான் தலைவன்; “நம்முடன் வருகின்ற வீரர் விரைந்து வருதலாலே மிகவும் வருந்தியுள்ளனர். அவர்கள் இடையிற் கட்டிய கச்சையை அவிழ்த்து விட்டுக் கொண்டு மெள்ள இடை இடையே தங்கி வருவார்களாக. இதுவரை பயன்படுத்தாமல் வைத்திருந்த தாற்று முள்ளாலே குதிரையைக் குத்தியாயினும் விரைவில் செலுத்துக!” என்கிறான் சென்ற வினை முடித்து மீளும் தலைவன்.

‘விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பழித்து அசைஇ
வேண்டமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வைமுள் திண்டி நாம்செலற்கு
ஏமதி வலவ! தேரே’

(நற்றிணை–21)

(விரைப்பரி–விரைந்து செல்லல்; வீங்கு செலல்–மிக்க செலவினையுடைய; இளையர்–வீரர்; அரைச்செறி கச்சை–இடுப்பிற் கட்டிய கச்சு; யாப்பு–கட்டு, வைமுள்–கூர்மையான தாற்றுக் கோல்; ஏமதி–செலுத்துக)

தலைவியை நினைத்துக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தக் கட்டளை இடுகின்ற காலத்திலும் தலைவன் தன் உயர்ந்த பண்பாட்டிலிருந்து நீங்கவில்லை. திடீரென்று தலைவனுடைய தேர் வேகமாகப் போகத் தொடங்கினால் உடன் வருகின்ற வீரர்கள் ஓடும்படி நேரிடுமன்றோ? அவர்கள் அவ்வாறு ஓடிப் பின் தொடர வேண்டிய இன்றியமையாமை போர்க்காலத்தில் உண்டு. ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை ஓடவைப்பது