பக்கம்:அகமும் புறமும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 • அகமும் புறமும்


பலரும் ஒன்று கூடி வாழவேண்டிய கடப்பாடுடையது இக்காலச் சமுதாயம். சாதாரணமாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றி விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒழிய, அவ்வாழ்வு சிறப்பதில்லை. எப்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்? அன்புள்ள பொழுதுதான் என்று கூறத் தேவை இல்லை. ஒருவர்மேல் கொண்ட அன்பு காரணமாகத்தானே அவர் செய்தது நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக்கொடுக்கிறோம்? இவ் அன்பு எவ்வாறு தோன்றுகிறது? இவ்வினாவிற்கு விடை அளிக்க ஒருவனாலேதான் முடியும். அவனே அனைத்தையும் ஒரு காரணங் கருதிப் படைக்கும் இறைவன். அவனை அல்லாத பிறர் அன்பு செய்யலாம்; அன்பைப் பெறலாம். ஆனால், ஏன் அன்புண்டாகிறது என்ற வினாவிற்கு விடை கூறல் இயலாது.

அன்புடையார்மாட்டு இயல்பாகவே நம்பிக்கையும் உண்டாகிறது. இந்நம்பிக்கை இல்லையாயின், அடிப்படை அன்பு விரைவில் ஆட்டங்கண்டு விடும். பல சந்தருப்பங்களில் அன்புடையார்மாட்டுச் சிலர் கொண்டிருக்கும் நம்பிக்கை நமக்கு வியப்பை உண்டாக்கும். ஏதோ ஒரு செயல் நடைபெற்றது. நாம் அனைவரும் அது நடைபெற்றதை நேரே கண்டிருக்கிறோம். ஆனால், அதனைக் கண்ட நாம் செயலில் ஈடுபட்டவர்களிடத்து அன்பு கொள்ளவில்லை. எனவே, செயலைச் செயலாகவே காண்கிறோம். தவிர, அதற்கு வேறு பொருள் கற்பிப்பதுமில்லை; கற்பிக்க நமக்குத் தோன்றுவதுமில்லை. ஆனால், அந் நிகழ்ச்சியைப் பற்றி அவர்களிடத்து அன்புடையார் மாட்டுக் கூறிப் பாருங்கள். அவர்கள் நம்ப மறுத்து விடுவார்கள். நிகழ்ச்சியின் மெய்ம்மையை நீங்கள் உறுதிப்படுத்திக் காட்டினாலும், அவர்கள் அதற்கு வேறு ஒரு பொருள் கூறுவார்கள். இது உலகியற்கை. அன்புடையார்