பக்கம்:அகமும் புறமும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 • அகமும் புறமும்

வருத்தத்தைத் தணிக்க, அன்றேல், ஓரளவு குறைக்க முற்படுகிறாள். தலைவி கண் எதிரே மழை பெய்கிறது; மயில் ஆடுகிறது; கொன்றை பூக்கின்றது. ஆனால், எப்பொழுது மழை பெய்தாலும் இவை நிகழ்கின்றனவா? இல்லையே! கோடை மழை பெய்யும்பொழுது மயிலின் ஆட்டமும், கொன்றை பூத்தலும் நிகழ்கின்றனவா? இல்லையே! ஆனாலும் என்ன? சாதாரண மன நிலையுடையவர் மழை பெய்தல் முதலியவை தனி நிகழ்ச்சிகளாயினும் ஒன்றுடன் ஒன்றைத் தக்க முறையில் தொடர்புபடுத்திக் காண்பர். ஆனால், மனம் மாறுபட்டு அல்லது கலங்கியிருப்பவர்க்கு இத்தொடர்பு எங்கே விளங்கப்போகிறது! தலைவி மனம் கலங்கியிருக்கிறாள்.

அவளுடைய கலக்கத்திற்குக் காரணம் யாது? தலைவன் கார்காலம் தொடங்கியவுடன் வந்துவிடுகிறேன் என்று கூறிப் போனான். இதோ கார்காலம் தொடங்கி விட்டது போலக் காணப்படுகிறது. ஆனால் தலைவன் வந்தபாடில்லை. தலைவன் வாராமையின், இது கார்காலம் அன்று என்று கூறிவிடலாமா? அல்லது இது கார்காலந்தான் எனினும், அவன் வரவில்லை என்று கூறிவிடலாமா? இதுவே தலைவியின் கலக்கம். இவ்விரண்டினுள் ஏதாவதொன்றுதான் உண்மையாக இருத்தல் கூடும். எது உண்மை என்று அறிய முடியாமல் இவள் வருந்தும் பொழுது தோழி இவளுடய உதவிக்கு வருகிறாள். எவ்வாறு? ‘தலைவன் வரவில்லை என்று கவலையுறாதே! இது கார்காலம் அன்று’ என்று கூறுகிறாள் தோழி. கண்ணெதிரே காண்பதை இல்லை என்று எவ்வாறு கூறுவது என்று நினைக்கிறீர்களா? இதோ தோழி கூறுகிறாள்:

‘மழை பெய்கிறதே. இந்த மேகம் என்று நினைக்கிறாயா? தலைவி, கலங்காதே! அறிவில்லாதது இந்த மேகம்! மறதியினால் நீரை உண்டாலும், உண்டதன் பயன்