பக்கம்:அகமும் புறமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 13


தொகை நூல்கள் இதனை நன்குணர்ந்த தோடல்லாமல் ஒரு படி மேலேயும் சென்றுவிட்டார்கள். எட்டுத்தொகை நூல்களுள் ஆறு அகத்திற்குத் தரப்பட்டன. ஏன்? புறத்தைவிட அகம் சிறந்தது என்று அவர்கள் கருதியதே காரணமாகும். ஏன் அவ்வாறு கருதினார்கள்? குறுகிய இடத்தில் நடைபெறுவதாயினும், அகம் சிறப்படையாவிடில், புறம் சிறக்க முடியாது. பெரிய மரமாகப் புறத்தே ஒரு பொருள் காட்சி நல்கினாலும் கண்ணுக்குத் தெரியாத சிறிய வேர்களாலேயே மரத்தின் வாழ்வு நடைபெறுகிறது. இச்சிறிய வேர்கள் நன்கு அமையாவிடில் அப்பெரிய மரம் நன்கு வாழ முடியாது. அதேபோலப் பிறர் அறிய முடியாத சூழ்நிலையில் சிறிய வீட்டில் நடைபெறும் அகவாழ்வு செம்மையாக அமைந்தால்தான் புற வாழ்வு செம்மைப்படும். குடும்பம் நன்கு அமைந்தால்தான் சமுதாயம் நன்கு அமையமுடியும்! தனி மனிதன் சீர்திருந்தினாலன்றிச் சமுதாயச் சீர்திருத்தம் என்பது குதிரைக்கொம்புதான்.


வள்ளுவர் வழி

இவ்வுண்மையை நன்கு உணர்ந்த காரணத்தாலேதான் பொதுமறை தந்த பெரியார், உலகம் முழுவதற்கும் நல்வழி வகுக்கத் தொடங்குகையில் புது முறையைக் கையாள்கிறார். அவருக்கு முன்னர்த் தோன்றிய பிளேட்டோ போன்றவர்கள் நாடு நலம் பெறும் வழியைக் கூறினார்கள். ஆனால், வள்ளுவர் இவ்வழியை விட்டுத் தனி மனிதன், அவன் குடும்பம் என்ற இரண்டையும் முதலில் பேசுகிறார். இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், வெஃகாமை, பயனில சொல்லாமை முதலிய அதிகாரங்கள் தனிப்பட்ட மனிதனும் அவனுடைய குடும்பமும் செம்மையடையக் கூறப்பெற்ற வழிகள் அல்லவா? குடும்பம் செம்மைப் பட்டாலன்றிச்