பக்கம்:அகமும் புறமும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வரலாறு • 217

என்பவையேயாம். பல ஊர்கள் சேர்ந்த ஒரு பெருநாட்டை அரசியல் பிழையாது ஓர் அரசன் ஆட்சி செய்வானேயாகில், அங்குச் செம்மையான ஒரு சமுதாயம் ஏற்பட வழியுண்டு. நாடு, ஊர் என்ற இரண்டும் மனிதன் உடல் உரம் பெற்று வாழவும், அரசன் சமுதாயம் என்ற இரண்டும் அவன் மனம் உரம் பெற்று வாழவும் பயன்படுகின்றன. இவை நான்கும் செம்மையாயிருப்பின், தனி மனிதன் வாழ்க்கை செம்மைப்படும். செம்மை தனித்தனியே ஏற்படின், சமுதாயம் செம்மையடையும். எனவே, இவை ஒன்றைப் பற்றி நிற்பவை என்பது தெள்ளிதின் விளங்கும்.

கவிஞன் தோன்றும் நாடு

நாடு சிறந்ததென்று சொல்லும்பொழுது நாம் அதில் வாழும் மக்களையே குறிக்கிறோம். இக்கருத்தை ஔவையார் புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் பின்வருமாறு அழகாகக் குறிக்கிறார்:

நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே!"

(புறம்-187)

[நிலமே, நீ நாடாக இருப்பினும், காடாக இருப்பினும் சரி: பள்ளமாக இருப்பினும், மேடாக இருப்பினும் சரியே, எங்கே நல்லவர்கள் உண்டோ, அங்கேதான் நீயும் நல்லை.]

எனவே, தமிழன் வாழ்க்கை அன்று நன்றாயிருந்த தென்றால், அதற்குப் பல காரணங்கள் இருந்தன. தமிழ்நாட்டில் தமிழ் மொழி அரசு வீற்றிருந்தது. நாட்டில் வேளாளரும், வணிகரும் செல்வங்கொழிக்கச் செய்தனர்.