பக்கம்:அகமும் புறமும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 • அகமும் புறமும்


உடையார் இல்லார் வேற்றுமை

ஒரு நாட்டை எடுத்துக்கொண்டால் அந்நாட்டில் சிலரே பொருள் படைத்தவராய் இருப்பர்; ஒரு சிலர் ஒன்று மற்ற ஏழைகளாய் இருப்பர்; பெரும்பான்மையோர் நடுத்தர மக்கள் என்று வழங்கப்படும் நிலையிலிருப்பர். இவர்கள் வாழ்க்கைதான் நாட்டின் செல்வநிலைக்கு அறிகுறியாகும். இத்தகைய மக்கள் பெரும்பாலும் உழைப்பையே நம்பி வாழ்கின்றவர்கள். உழைத்த உழைப்புக்கேற்ற பயன் கிடைக்கின்றபொழுது இவ்வகை மக்கள் நல்ல பண்பாடு உடையவர்களாய் இருப்பார்கள். மேலும், தம்மினும் மேம்பட்ட பொருளாளர் நிலைமையைத் தாமும் அடைவதற்கேற்ற வழிகளை முனைந்து தேடுவர். ஆனால், இத்தகைய எண்ணம் மக்களுக்கு எல்லாக்காலத்தும் இருந்து வந்ததென்று கூற முடியாது. செல்வமுடையார் செம்மையாய் வாழ்ந்து, செல்வத்தின் பயன் ஈதலே தவிர இறுக்கிப் பிடித்தலன்று என்று நினைக்கின்ற வரை, இடையிலுள்ள மக்கள் அவர்கள்மேல் பொறாமையோ வெறுப்போ கொள்ளமாட்டார்கள். இந்நிலை இந்த நாளில் மாறிவிட்டமையாலேதான் பெருந்துன்பங்கள் தோன்றுகின்றன. இந்த நடுத்தர மக்கள் மேலும் பொருள் சேர்த்து அப்பொருளாளர் கூட்டத்தில் சேர முனைகின்றார்கள். அப்பொருளாளர்களோ இவர்கள் உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கொடாமல் இவர்களை மேலும் வறுமையடையச் செய்ய முயல்கின்றார்கள். இதனால், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை பெரிதாகிப் பூசல் முற்றுகிறது.

பழந்தமிழ் நாட்டின் நிலை

இனி, பழந்தமிழ்நாட்டை நோக்குவோம். அந்நாட்டில் ஒரு சிலர் பணம் படைத்தவராய் இருந்தனர் என்பதும்,