பக்கம்:அகமும் புறமும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 265

செய்துள்ளனர். ஒவ்வோர் அறையிலும் ஒவ்வொரு பாவை இருக்கிறது. இந்தப் பாவை எவ்வளவு வேலைப்பாடும் அழகும் நிறைந்துள்ளது! நல்ல வார்ப்படத் தொழிலில் கைதேர்ந்த யவன நாட்டுக் (Greek) கொல்லன் அமைத்த அழகிய சிற்பமாகும் இது. இந்தப் பாவையின் கையில் இருக்கும் கிண்ணம் போன்ற பொருள்தான் அகல் விளக்காகும். இக்கையேந்து அகல்நிறைய நெய்யை விட்டுப் பருத்த திரிகளை நெய்யில் இட்டு எரிய விடுகின்றனர். விளக்கின் சுடர் குறையுந்தோறும் ஆட்கள் இருந்து கொண்டு தூண்டிவிடுகின்றனர். இந்த விளக்குகள் ஏற்றினவுடன் சுற்றியுள்ள சுவர்தோறும் இவ்வொளியின் எதிர் ஒளி விளங்குகிறது. காரணம் என்ன? அரண்மனை ஆதலால், மிகச் சிறந்த, ‘வெள்ளி அன்ன விளங்கு சுதை’ (சுண்ணாம்பு) பூசியிருக்கிறார்கள்; ஆதலால், எதிர் ஒளி மிகுதியாய் இருக்கிறது. இந்த அழகிய சுவர்களும் வெறுஞ் சுவர்களாய் இல்லை. இவற்றில் எல்லாம் மிக அழகிய பூ, கொடி முதலிய சித்திர வேலை செய்திருக்கிறார்கள்.

தூண்கள்

தூண்கள் எவ்வாறுள்ளன என்று காண்டல்வேண்டும். இன்றும் மதுரை சென்று திருமலை நாயக்கர் அமைத்த கட்டடங்களைக் கண்டவர்கள் பெருவியப்பை அடைகின்றனர். இதுவே இவ்வாறாயின், நெடுஞ்செழியனின் அரண்மனைத் தூண்கள் எவ்வாறு இருந்திருக்கும்? ‘மாதிரள் திண்கால்’ என்று கூறப் பெற்றமையின் பெரிய தூண்கள் என்பது அறியமுடிகிறது. ஆனால் நாயக்கர் காலத் தூண்கள் கல்லாலும் சுதையாலும் கட்டப் பெற்றவை. பாண்டியனின் தூண்களோ, ’மணிகண்டன்ன' என்று கூறப் பெறுதலின், கரிய நிறத்தையுடைய ‘சலவைக் கற்கள்’ என்று நினைய வேண்டி உளது.