பக்கம்:அகமும் புறமும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270 • அகமும் புறமும்

குழந்தை கருத்தரிக்கும்பொழுது அத்தாய் தந்தையரின் மனநிலை முறையே காதலிலும் மறத்திலும் ஈடுபட்டிருக்குமாகலின் பிறக்கும் குழந்தையும் இவ்விரண்டு பண்புகளையும் பெற்று விளங்குமன்றோ?

கட்டில் செய்வதிலும் பழந்தமிழ் மக்களுடைய ஒப்பற்ற மனத்தத்துவ அறிவு நன்கு காணக்கிடக்கிறது.

மன்னன் வலிமை

இத்தகைய இன்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த தமிழ் மன்னன், தான் மன்னன் என்பதையும், பகை நீக்கி ஆள வேண்டுவது தன் கடமை என்பதையும் மறந்தானல்லன். பகை நீக்கம் என்றால் படை சேர்த்தல் என்பதுதானே கருத்து? இதோ அதனைச் செய்கிறான் தமிழ் மன்னன்.

தக்கதோர் மனை வகுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் மன்னன், பரம்பரை உரிமையால் அத்தாயபாகத்தை எய்தினான் என்றே தமிழ் இலக்கியம் கூறுகிறது. கரிகாற்பெருவளத்தானுடைய தந்தை இளஞ்சேட்சென்னி, மைந்தன் பிறக்கச் சிறிது காலம் முன்னர் இறந்துவிட்டான் என்பதைக் குறிப்பிடவந்த முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர், கரிகாலன் தாயின் வயிற்றில் இருக்கையிலேயே தாயபாகத்தைப் பெற்றுவிட்டான் என்று குறிப்பிடுகிறார்.

‘தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி’

(பொருநராற்றுப்படை 132)

என்ற அடியும்.

‘உருகெழு தாயம் ஊழின் எய்தி’

(பட்டினப்பாலை 227)

என வரும் பட்டினப்பாலை அடியும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.