பக்கம்:அகமும் புறமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 23

ஏன் போற்றினார்கள்?அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தானே வேண்டும்.

ஆழ்ந்து நோக்கினால் குறிப்பின்மூலம் தன் கருத்தைக் கவிதையில் வலியுறுத்துவார் இப்புலவர் பெருமகன் என்பதனை அறியமுடிகிறது.

இப்பாடலின் தனிச் சிறப்பு, காதல் என்பது ஒரு மனநிலை என்பதனையும் அது ‘பொள்’ எனத் தோன்றும் என்பதனையும் ஒரே சூழலில் பலர் இருப்பினும் குறிப்பிட்டவர்களையே அது தாக்குகிறது என்பதனையும் பிற்பகுதி எடுத்துக்காட்டுகிறது. இதில்கூட ஒரு நுண்மையான குறிப்பு ஒன்று பெறவைக்கின்றார் கபிலர்.

இம் மலைநாட்டுத் தலைவன், அவனைக் கண்ட பெண்கள் அனைவரும் ஓரூர்க்காரர்களேயாவர். எனவே இத் தலைவி உள்ளிட்ட பலரும் இத் தலைவனை இதற்குமுன் பலமுறை கண்டிருக்கக் கூடும். ஆனால் இத்தனை தடவைகளிலும் அப்பெண்களுக்கோ அல்லது தலைவிக்கோ எவ்வித மனப்பேதலிப்பும் தோன்றியதில்லை.

வேட்டம் புக்க தலைவன் வேட்டம் புகு நாட்கள் தோறும் இவ்வழி உள்ளிட்ட பலவழிகளில் விலங்குகளைத் தேடிச் செல்வதுண்டு.

வழியில் நிற்பவர்களைக் காணின் தான் தப்பிய விலங்கு அவ்வழி போயிற்றோ என்று கேட்பதும் இயல்பானது தானே.

இதற்கு முன்னர்ப் பலமுறை கண்ட தலைவன் பல நாளும் தலைவியின் உடன் வருகின்ற தோழியர், பலவகைகளில் அவன் கேட்கும் வினா.

ஆனால் இதுவரையில் இல்லாத ஒரு புதுமை இன்று நிகழ்ந்துவிட்டது. தலைவி முழுமாற்றம் பெற்றுவிட்டாள்.