பக்கம்:அகமும் புறமும்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 318

தெரிகிறது. தான் செய்யும் காரியம் தன் மதிப்புக்கு ஏலாதது என்பதை ஒருவர் எடுத்துக்காட்டியவுடன் அச்செயல் செய்வதிலிருந்து விலகி விடுகிறான். இதிலிருந்து ஒன்றை அறிய முடிகிறது, மனிதனிடத்து அமைந்து கிடக்கும் ‘அகங்காரம்’ எனப்படும் ‘யான்’ என்பதையோ ‘மமகாரம்’ எனப்படும் ‘எனது’ என்பதையோ தொட்டுவிட்டால், அவன் துள்ளி எழுகிறான். உறங்கிக் கிடக்கும் ஒருவனைத் தொழிற்படுத்த வேண்டுமாயின், இவற்றைத் தூண்டி விடுவது சிறந்த வழி என்றே படுகிறது.

தூண்டிலில் இரை

‘யான் எனது’ என்பனவற்றைத் தூண்டுவதன் மூலம் ஒருவனை நல்லது செய்யவும் தூண்டலாம்; அல்லது தீயவை செய்யவும் செலுத்தலாம். இவை இரண்டும் தூண்டுபவன் மன நிலையைப் பொறுத்தவை. பழந்தமிழ் அரசர்களின் புகழ் விருப்பம் இவ்வகங்காரத்திலிருந்து அரும்பினதேயாகும். அவன் புகழைப் பாடினவர்கள் ஒரு வகையில் அம்மன்னனுடைய ‘யானுக்கு’ இரை இட்டனர். ‘யான்’ என்ற மீனுக்குப் ‘புகழ்’ என்னும் இரையைக் காட்டிலும் சிறந்தது ஒன்றில்லை. அதிலும் ‘கவிதை’ என்னும் தூண்டிலிற்கோத்த ‘புகழ்’ என்னும் இரையைக் கண்டு மயங்காத மனிதர்களே மிகமிகக் குறைவாவர்; பழந்தமிழ் மன்னர்களில் பெரும்பான்மையானவர் ‘மனிதர்’களே. எனவே, அவர்கள் இத்தூண்டிலில் சிக்குண்டதில் வியப்பில்லை. இது கருதியே போலும் வள்ளுவப் பெருந்தகை ‘புகழ்’ என்ற அதிகாரத்தை இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்துப் போனார்! மேலே கூறப்பட்ட முறையில் அறத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று கூறிய ஆசிரியர், மக்கள் இனத்தை மறுமுறையும் கூர்ந்து நோக்குகிறார். ஒரு சிலர் பயன் என்ற ஒன்றைக் கண்டால் ஒழிய நன்னெறி ஒழுகமாட்டார்கள். ஆனால், பயன் என்பது இம்மையில் அன்றி