பக்கம்:அகமும் புறமும்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319 • அகமும் புறமும்

மறுமையில்தான் கிடைக்குமெனின், ‘அது கிடக்கட்டும்’ என்று கூறுகிறவர்களும் இம்மக்கள் தொகுப்பில் உளராகலின், அவர்கள் பொருட்டாகவே ‘புகழை’ இறுதி அதிகாரமாக வைத்தார் போலும்! இந்தத் தூண்டில் பொன் முள்ளாகலின் இல்லறத்தார்க்கே உரியது என்பார் போல இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்து உள்ளார். துறவு நெறி செல்வபவர் இப்புகழ் என்னும் வலையில் பட்டால் மீள்வது அரிதன்றோ?


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.
                                                           (குறள்–346)

என்று கூறிய பிறகு துறவிக்குப் புகழ்மேல் ஆசை இருத்தல் முறையன்று. எனவே, துறவறத்தில் இவ்வதிகாரத்தை வள்ளுவர் வைக்கவில்லை.

புகழ் தேட வழி

இல்லறவியலில் ‘புகழ்’ அதிகாரத்தை வைக்கும் பொழுது ஆசிரியர் மிகுந்த கவனத்துடன் வைத்துள்ளார் என்பதை முன் பின் பார்த்தால் நன்கு விளங்கும். ஈகை என்ற அதிகாரத்தின் பின்னர் இவ்வதிகாரம் அமைந்துள்ளது நோக்கற்குரியது. அதனை ஒருவேளை மக்கள் கவனியாமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சிப்போலும் ஆசிரியர் புகழ் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில் முதல் இரண்டு குறள்களிலும் ஈகை உடையானுக்கே புகழ் உண்டு என நினைவூட்டுகிறார்! புகழ் தேடவேண்டும் எனினும் அதற்குப் போரைக் கருவியாகக் கொள்வதை வள்ளுவர் விரும்பியிருக்க மாட்டார். பிறர்க்குத் தீமை புரிந்து அதனால் புகழ் வருவதாயின் அதனைப் புகழ் என்றுகூற ஒருப்பட மாட்டார்.


‘மறந்தும் பிறன்கேடு சூழற்க’
                                                           (குறள்–204)

என்று கூறிய பெரியார்.