பக்கம்:அகமும் புறமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 • அகமும் புறமும்

தொடங்கிவிட்டால், அந்நாள் நன்னாளன்று. உலகம் அழியும் நாள் அன்றேயாகும். பொருள்களின் வேறுபாட்டைக் கூர்ந்து அறிவது அறிவு. பெரும்பாலும் ஒற்றுமைப்பட்ட இயல்புகள் வாய்ந்த இரு பொருள்களை ஆராய்ந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமை கருதி இரண்டாகப் பிரித்துக் கூறுவது அறிவின் வேலை. பயன் கருதாது ஆராய்ந்து சென்று பொருளின் உண்மைத் தன்மையைப் புலப்படுத்துவது அறிவின் தொழிலாகும். ஆனால், இங்ஙனம் செய்வதால் உள்ள நலந் தீங்குகளைப் பற்றி அறிவு கவலைப்படுவதில்லை. அணுவைப் பற்றி ஆராய முற்படுவது அறிவு. ‘அணு’ என்பது பகுக்க முடியாத ஒன்று, என்று ஒரு காலத்தில் நினைத்ததும் கூறியதும் அறிவுதான். அதே அணுவைப் பயன்கருதாது உடைத்து அதனுள் இருக்கும் பொருள்களைக் காணத் துடித்துக் கண்டதும் அறிவுதான். இவ்வணுவின் சக்தி எவ்வளவு என்று காண முற்பட்டதும் அறிவுதான். அணுவைத் துளைத்து அளவற்ற ஆற்றலை வெளியிட்ட அறிவுக்கு வணக்கம்! ஆனால், இன்று நம்மில் பலரும் இவ்வாற்றலை வெளியிட்ட அறிவைப் போற்றி வியவாது தூற்றுகிறோம். நாகாசாக்கி, ஹீரோஷிமா என்ற நகரங்களில் வாழ்ந்து இன்று எஞ்சியவர்கள் இந்த அறிவைப் போற்றுகிறார்களா என்பதை அவர்களைக் கேட்டால் அல்லவோ தெரியும்! காரணம் என்ன? அறிவு பண்பாட்டுடன் கலவாமல், கேவலம் அறிவு மாத்திரையாய் நின்று தொழிற்படுவதானால் இந்நிலைக்குத்தான் வர நேரிடும். தம் அறிவின் பயன் மக்கட் சமுதாயத்திற்கு நலம் விளைப்பதா, தீங்கு விளைப்பதா என்பது பற்றிக் கவலையுறாமல் செய்யப்படும் அறிவின் செயல் எதுவாயினும் அது உலகோரால் பழிக்கவே படும்.

இனிப் ‘பண்புடைமையாவது யாது?’ எனக் காண்டல் வேண்டும். இச்சொற்கும் பொருள்கூற வந்த ஆசிரியர் பரிமேலழகர், ‘பெருமை சான்றாண்மைகளில் தாம்