பக்கம்:அகமும் புறமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 77



அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்

(திருமந்திரம்-279)

என்று கூறியதோடு அமையாது. ‘அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்’, என்றும் அல்லவா கூறிப் போந்தார்? ‘அன்பே சிவமாவது என்பதன் கருத்து என்ன? இறைவர் அன்பே வடிவாக உடையார் என்ற ஒரு பொருள் நிற்க. அன்பே இறுதியில் சிவமாக ஒருவரை ஆக்கிவிடும் என்பதும் ஒரு பொருள் அன்றோ? பிறவிக்கடல் நீந்த வேண்டும் என்று நினைப்பவர்க்கு அன்புதான் புணையாகிறது. ஏனைய துறவு நிலை முதலியனவும் வீடு பேற்றைத்தரினும், இவ்வுலகில் கடுந்துன்பத்தை அனுபவிக்கச் செய்கின்றன அவை. ஆனால், இவ்வுலகிலும் இன்பம் அனுபவித்து மறுமையிலும் வீடுபேற்றை அளிக்கவல்லது ஒன்று உண்டு எனில், அது ‘அன்பு’ என்ற ஒன்றுதான். இது கருதியே ஆசிரியர்,


அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.

(குறள்-75)


அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு,

(குறள்-80)

என்றும் கூறினார்.

அன்பின் இரு பயன்கள்

பிறவிக்கடல் நீந்தப் பெரும்புணையாகும் இவ்வன்பு, சமுதாயத்தில் ஒருவன் நன்கு வாழவும் வழிவகுத்துத் தருகிறது. இக்கால உலகில் வாழும் ஒருவன் காலையிலிருந்து மாலை வரை எத்துணைப் பேர்களுடைய உதவியை நாடி வாழ வேண்டியவனாய் உள்ளான்? 'கேவலம் பணம் ஒன்று மட்டும் இருந்தால் மன