பக்கம்:அகமும் புறமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம்

அகத்தின் அடிப்படை

சீரும் சிறப்புடனும், உயர்ந்த குறிக்கோளுடனும் ஒரு சமுதாயம் வாழ வேண்டுமாயின், அவ்வாழ்வில் அமைதி நிறைந்திருத்தல் வேண்டும். அமைதி இல்லாத வாழ்வில் பண்பாடு, நாகரிகம், குறிக்கோள் என்பவை தோன்றா; தோன்றினாலும், நிலைத்து வளரா. பழந்தமிழன் வாழ்வில் சிறந்த குறிக்கோளும், பண்பாடும் நிறைந்து காணப்பெற்றன எனில், அவனுடைய வாழ்வு அமைதி நிறைந்ததாய் இருந்திருக்கும் என்று கூறத் தேவையில்லை. அமைதி என்பது புறத்தே இருந்து வருவதன்று; அகத்தே தோன்றுவது. எத்துணை விரும்பினாலும், விலைகொடுக்க முயன்றாலும் சிலருக்குக் கிட்டாத இவ்வமைதி, ஒரு சிலருக்கு எளிதாகக் கிடைத்து விடுகிறது.

அமைதி தோன்றுவது எங்கே?

அமைதி அகத்தே தோன்றி மலர்வதாயினும் அதனுடைய வளர்ச்சிக்குப் புறமும் ஓரளவு உதவி புரிகின்றது. பல சந்தருப்பங்களில் புறப்பொருள்கள் அமைதியின் வளர்ச்சிக்குத் துணை புரியாவிடினும், இடையூறு செய்யாமல் இருந்தாற்போதும் என்று கூறத் தோன்றுகிறது. இதனாலேயே அமைதியை நாடி அலையும் பெரியோர்கள், மக்கட் கூட்டம் இல்லாத காடு முதலியன நோக்கி ஓடிவிடுகிறார்கள் போலும். காடு நோக்கி ஓடினாலும் புறத்தே அமைதியான சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ளலாமே தவிர, அகத்தே—மனத்தின் உள்ளே—அமைதியைப் பெற முடியாது. அது தானே முகிழ்ப்பது. அகத்தே அமைதி பிறக்கப் புறச்சூழ்நிலை ஓரளவு துணைக் காரணமாகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அகமும்_புறமும்.pdf/9&oldid=1347534" இலிருந்து மீள்விக்கப்பட்டது