பக்கம்:அகமும் புறமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 91

அடுத்துக் ‘குறிப்பறிதல்’ என்றோர் அதிகாரம் ஏற்படுத்திப் பத்துக் குறளிலும் கண்ணின் பெருமையைப் பேசுகிறார். எனவே, பெண்ணிடத்து அழகைக் காண முற்படுபவன் அவள் கண்ணிடத்தே அதனைக் காண முற்படவேண்டும். இது அத்துணை எளிதானதன்று. பலகாலம் ஒருவரிடத்துப் பழகியவிடத்தும் அவருடைய கண்ணிலிருந்து மனநிலையை அறிதல் பலருக்கு இயலாததாம். இது கருதியே ஆசிரியர்,


பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்.
(குறள்–709)

என்று கூறுகிறார். எனவே, கண்கள் மூலம் ஒருவர் மன நிலையை அறிய அனைவராலும் முடியாதென்பதும், ஒரு சிலர்க்கே அது இயலும் என்பதும் பெற்றாம். தலைவியின் கண்களைக் கொண்டே காதலை அறிதல் வேண்டும் என்ற கருத்தை வள்ளுவர் குறிக்கிறார் என்பதுங் கண்டோம். அவ்வாறாயின், அனைவரும் கண்களைக் கொண்டு காதலை அளக்க அறிந்திருந்தால் ஒழியக் காதல் வாழ்வு வாழ முடியாது. கண்கள் மூலம் மனநிலையை அறிதல் அனைவர்க்கும் இயலாது எனில், காதல் வாழ்வு வாழ்வதும் அனைவர்க்கும் இயலாது என்பது பெறப்படும். இக்கருத்தை மனத்துட்கொண்டு,


மலரினும் மெல்லிது காமம்;சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்
(குறள்–1289)

என்ற குறளை ஆராயும்பொழுது உண்மை விளங்கும். பலரும் காதல் வாழ்வு வாழ்கிறோம் என்று நினைத்திருப்பினும் உண்மையில் காதலின் இயல்பை அறிந்தவர் மிகச்சிலரே என்பதைத் தலைவியின் கண்களை நேரடியாக 45 இடங்களிலும், கண்ணின் தொழிலை 23 இடங்களிலும் கூறுவதன் மூலம் வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

7