உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதாம் ஆண்டுகளில் அவர் எழுதிய எழுத்துக்கள், மற்றும் அவரது நடவடிக்கைகள் முதலியவை பற்றி நமக்கு இன்னும் விவரங்கள் கிடைக்கவில்லை. என்றாலும், அவரது வரலாற்றை எழுதியுள்ள ரா. அ. பத்மனாபன் கூறியுள்ளது போல், "அவரது பேச்சுக்களும் பிரசுரங்களும் அவரை மீண்டும் தொல்லைக்கு உள்ளாக்கின". 1922-ல் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்; ராஜத்துரோகம் மற்றும் பிற "குற்றங்களுக்காக"ப் பத்தாண்டுச் சிறைத் தண்டனையும் பெற்றார். அவர் தமது சிறைவாசத்தை அப்போது பிரிக்கப்படாதிருந்த பஞ்சாபில் மாண்ட் கோமரி சிறையிலும், மூல்ட்டான் சிறையிலும், சிறிது காலம் ரங்கூன் சிறையிலும் கழித்தார். ரங்கூன் சிறையிலிருந்து 1930 - ல் விடுதலையாகிச் சென்னைக்கு வந்தார். ஆயினும் அதன்பின் அவர் அரசியல் நடவடிக்கைகளைக் கைவிட்டு விட்டு, நாடு முழுவதிலும் சுற்றித் திரிந்தார் ; 1933-ல் சன்னியாசியாக மாறிவிட்டார். அன்று முதல் அவர் தம் பெயரையும் சாது சத்குரு ஓம்கார் என்று மாற்றிக்கொண்டார். இப்போது 90 வயதை எட்டிவிட்ட அவர் மைசூரில் நந்தி மலையின் அடிவாரத்திலுள்ள ஓர் ஆசிரமத்தில் துறவியாக வாழ்ந்து வருகிறார்.

திரு. வி. க.

மகாகவி பாரதி தமது 39 - வது வயதில் 1921-ல் அற்பாயுளில் மறைந்து விட்ட போதிலும் அவர் ஏற்றி வைத்த கண்ணோட்ட தீபத்தை , அபிலாஷையின் ஜோதியைத் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சிலர் உடனே ஏந்திக்கொண்டு விட்டனர். அவர்களும் அக்டோபர் புரட்சியைத் தமது விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் துருவ தாரகையாகவே கண்டனர். அவர்களில், தமிழ் மக்கள் "திரு. வி. க." என்று அன்போடு குறிப்பிட்டு வந்த வி. கல்யாணசுந்தர முதலியார் முன்னணியில் நின்றார்.

25