பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சர்மா எழுதிய ஒப்புநோக்கு நூலாகும். சுமார் 80 பக்கங்கள் கொண்ட இந்நூலை ரங்கூன் மின்னொளிப் பிரசுரம் 1937-ல் வெளியிட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ராணுவ வெறியர்கள் ரங்கூன் நகரின் மீது குண்டுகளை வீசி நாசம் செய்தபோது, பர்மாவிலிருந்து வெளியேறித் தமிழகத்துக்குத் திரும்பி வந்த சாமிநாத சர்மா பல குறிப்பிடத்தக்க நூல்களை எழுதுவதில் தமது நேரத்தையும் சக்தியையும் செலவிட்டு வந்தார். இதன் பயனாக, யுத்த காலத்தில் அவர் எழுதிய நூல்களில் சோவியத் ருஷ்யாவைப் பற்றியும், காரல் மார்க்ஸ் பற்றியும் எழுதப்பட்ட நூல்கள் இரண்டும் குறிப்பிடத்தக்கவையாகும். சோவியத் ருஷ்யா என்ற அவரது நூலே, தமிழில் சோவியத் யூனியனைப் பற்றி முதன்முதலில் வெளிவந்த முழுமையான வரலாறு என்று கூற வேண்டும். அதே போல் காரல் மார்க்ஸ் என்ற அவரது வரலாற்று நூலும், தமிழில் மார்க்சைப் பற்றியும் அவரது கொள்கை, பணி ஆகியவை பற்றியும் முதன்முதலாக வெளிவந்த விரிவான நூலாகவே திகழ்ந்தது. இவையிரண்டும் சக்தி காரியாலய வெளியீடுகளாக வெளிவந்தன.

லெனினது வாழ்க்கை வரலாறு பற்றித் தமிழில் வெளிவந்த இரண்டாவது நூல், வி. கிருஷ்ணசாமி எழுதிய “லெனின்” என்ற நூலாகும். இது 1939-ல் சென்னை நவயுகப் பிரசுராலய வெளியீடாக வெளிவந்தது. சுமார் 150 பக்கங் கொண்ட இந்நூலே தமிழில் முதன்முதலில் வெளிவந்த முழுமையான, விரிவான வாழ்க்கை வரலாறு எனலாம். இந்நூல் லெனினது வாழ்க்கை , பணி. போதனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு எடுத்துக் கூறியது. இதன்பின் 1940-ல் டாக்டர் பா. நடராஜன் எழுதிய “லெனினும் ரஷ்யப் புரட்சியும்” என்ற நூல் வெளிவந்தது.

மேலும், மேற்கூறிய நவயுகப் பிரசுராலயம் 1938-ல் சென்னையில் தொடங்கப்பட்ட போது, அந்தப் பிரசுராலயத்தின் முதல் வெளியீடாக, கம்யூனிஸத் தத்துவங்கள் பற்றிய

41