உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்களும், மற்றும் பல சோவியத் இலக்கியங்களும் ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழில் வெளிவரத் தொடங்கின. இவற்றைப் பிரபல தமிழ் எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணன், கு. அழகிரிசாமி, எஸ். சங்கரன், வல்லிக்கண்ணன், அ.லெ. நடராஜன் முதலியோரும் மற்றும் பிறரும் தமிழாக்கியிருந்தனர். மாக்சிம் கார்க்கியின் முக்கியமான நூல்கள் யாவும் இந்தக் காலத்தில் தமிழில் வெளிவந்தன. மாக்சிம் கார்க்கியின் நூல்களும் நிக்கோலாய் ஆஸ்திரோவ்ஸ்கியின் “வீரம் விளைந்தது” என்ற நூலும் தமிழகத்தைச் சேர்ந்த பல படைப்பிலக்கிய கர்த்தாக்களைப் பெரிதும் கவர்ந்து அவர்களைத் தமது செல்வாக்குக்கு ஆட்படுத்தின என்றே சொல்லலாம். குறிப்பாக, கார்க்கியின் தாய் நவீனமும், ஆஸ்திரோவ்ஸ்கியின் நாவலும், உலகில் சர்வஜன நீதியும் நியாயமும் நிலைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்களுக்கு ஓர் இலக்கியக் கொள்கைப் பிரகடனம் போலவே பயன்பட்டன. உண்மையான மனிதாபிமானம் என்றால் என்ன என்பதைப் பல தமிழ் எழுத்தாளர்களுக்கும் கற்றுக் கொடுத்ததும் மாக்சிம் கார்க்கியே எனலாம்.

சோவியத் இலக்கியங்களின் செல்வாக்கும், அக்டோபர் புரட்சியின் செல்வாக்கும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகளும், இளம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் மட்டும்தான் உணரப்பட்டன என்பதில்லை. முதுபெரும் எழுத்தாளர்கள் சிலர் மத்தியிலும் அதனை உணர முடிந்தது. உதாரணமாக, மகாகவி பாரதியின் சமகாலக் கவிஞராக விளங்கியவரும், முப்பதாம் ஆண்டுகளின் போது தமது மனிதாபிமானமும் தேசபக்தியும் மிக்க கவிதைகளின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான வருமான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தமது அந்திம காலத்தில், 77 ஆவது வயதில் சோவியத் யூனியனைப்பற்றி ஒரு வெண்பா எழுதினார். அது வருமாறு :

44