பக்கம்:அங்கும் இங்கும்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70
 

தெளிவோடும் விடை பெற்றுக் கொண்டாரே" என்று முதியோர் கல்வி நிலைய முதல்வரைப் பாராட்டினேன்.

“முதியவர் பொறுப்புடையவர். தவறு செய்வது மானிட இயல்பு. தவறை மிகைப்படுத்தி, மாணவர்களைக் குட்டுவது, இளைஞர்கள் விஷயத்திலேயே ஆகாது. முதியவர்கள் விஷயத்தில், அம்முறையைக் கொண்டால், சொல்லாமல் நின்று விடுவார்கள் ஒவ்வொருவராக.

" தன்னிச்சையாக, நினைத்த வகுப்பிலே சேரவிட்டால் என்ன கேடு ? அவர்களே, தங்கள் திறமையை அறிந்து, கொள்ள உதவியது, அது. மேல்நிலை முடியாதென்று உணர்ந்தபோது, தானே, கசப்பு ஏதும் இல்லாமல், கீழ் நிலைக்குச் செல்ல விரும்பினார்.

'சோதனை' என்ற பெயரால், தொடக்கத்திலேயே தாங்கள் தரம் பிரித்தால். பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கல்வி நிலையத்தில் சேர்ந்திருக்க மாட்டார்கள். முதியவர்களை 'விட்டுப் பிடிப்பதே' சிறந்தது. யாரும் மனம் நோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். தவறு நேர்ந்தால், சிறுமைப் படுத்தக்கூடாது திருத்த மட்டுமே விரையலாம். இதுவே கல்வியை வளர்க்கும் முறை" இது கல்வி நிலைய முதல்வரின் கருத்துரை. பொருள் செறிந்த உரையல்லவா ?

கல்வி, காட்டு முள் அல்ல. தானே வளரும் தாவரமும் அல்ல. அது வளர்க்கப்படும் பயிர், நுட்பப் பயிர். முதியோர் கல்வியோ மிக நுட்பப் பயிர்.

கல்வியாளருக்குப் புலமை மட்டும். போதாது ? பயிற்சி மட்டும் போதாது ; திறமை மட்டும் போதாது ; மனித்த் தன்மையும் வேண்டும்; தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற உணர்வு ஊடுருவியிருக்க வேண்டும். நசுக்காமல், குத்தி மகிழாமல், ஊக்கி உதவுபவரே, வளர உரமிடுவோரே, கல்வியாளர்.