பக்கம்:அங்கும் இங்கும்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
76
 கல்லூரி மாணவ மாணவியார்-முதியோர்-கல்வியின் மீதே கண்ணாயினார் என்பதை அறிந்தேன், மகிழ்ந்தேன்.

இதோ உங்களிடம் உரைத்து விட்டேன். நம் தம்பிகள், தங்கைகள் - மாணவ, மாணவியர்-காதுகளிலும் போட்டு வையுங்கள்.

பின்னர் கல்லூரியின் பல பகுதிகளையும் காட்டிக் கொண்டு வந்தார். சிற்சில வகுப்புகளுக்குள்ளும் நுழைந்தோம். ஒரு வகுப்பில் அம்மையார் ஒருவர் பெயரைச் சொன்னார். பின் வரிசையில் இருந்த ஓர் அம்மாள் கையை உயர்த்தினார்.

"வேலு. நீங்கள் பார்த்துப் பாராட்டிய மயில் விரிப்பை நெய்தவர் இவரே" என்றார் முதல்வர்.

“ஆகா ! உங்கள் வேலைப்பாடு மிக நன்றாயிருக்கிறது. எவ்வளவு காலம் பயிற்சி பெற்றீர்கள். இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறீர்களே !” என்றேன் நான்.

“ஒராண்டு காலம் : இக்கல்லூரியில் கற்றுக் கொண்டேன். பலன், அந்த விரிப்பு” என்று அடக்கமாகக் கூறினார் அந்த அம்மாள்.

“அப்படியா ? முந்தைய பழக்கமின்றி, இந்த வயதில், புதிய கலையைக் கற்றுக்கொண்டு, இவ்வளவு பெரும் வெற்றி பெற்றுள்ள உங்களுக்குப் பரிசு கொடுக்கலாம்” என்றேன்.

"கொடுக்கலாமென்ன ! ஏற்கனவே இதற்குப் பரிசு பெற்று விட்டார்கள். சென்ற ஆண்டு. ஸ்காட்லாண்ட் முழுமைக்கும், கற்றுக்குட்டி நெசவாளர்களுக்கென்று போட்டி நடந்தது. அப்போட்டியில், இவ்விரிப்பிற்காக, இந்த அம்மாளுக்கு முதற் பரிசு கிடைத்தது" என்று பூரிப்போடு உரைத்தார் முதல்வர்.