பக்கம்:அங்கும் இங்கும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. முதிய இளைஞர் இருவர்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் ஆண்டு, ஸ்காட்லாந்தின் தலைநகரமாகிய எடின்பரோவில் இருந்தேன்.

ஒரிரவு ஏழு மணிக்கு, முதியோர் கல்விக் கூடமொன்றைக் காண ஏற்பாடாகி இருந்தது. அப்போது, மழை துாறிக் கொண்டிருந்தது. குளிர் காற்று சீறிக் கொண்டிருந்தது.

ஒட்டல் அறையிலே தங்கிவிட ஆசை. ஆனாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற உண்ர்ச்சியால் உந்தப்பட்டு இரவுக் கல்விக்கூடம் போய்ச் சேர்ந்தேன்.

கல்லூரி முதல்வரைக் கண்டேன். அவர் அறையில் மேசையின் மேல் அழகிய விரிப்பொன்று இருந்தது. அது என் கண்ணைக் கவர்ந்தது; கருத்தையும் கவர்ந்தது.

அதிலே, மயிலொன்று பின்னப்பட்டிருந்தது. மயிலின் இயற்கைத் தோற்றம் என்னைத் தொட்டது. அதைப்பாராட்டினேன். முதல்வர் மகிழ்ந்தார். பலரும் பாராட்டினதாகக் கூறினார்.

கல்லூரியின் நடைமுறையைப் பற்றி விளக்கினார், அன்றைய குளிரிலும் மழையிலும்கூட, வழக்கமான வருகை இருப்பதாகக் கூறினார்.