பக்கம்:அசோகர் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கதை இரண்டு
29
 

தருகின்ற இந்த வாசகத்தில் என்ன சிறப்பு இருக்கிறது? வயதில் மூத்தவர்களை யெல்லாம் இளைஞர்கள் போற்றிக் கொண்டிருந்தால், மூடத்தனத்தை ஆராதிப்பதைத் தவிர வேறு என்ன பயன் காணமுடியும்? நானும் எத்தனையோ நூல்கள் கற்றிருக்கிறேன். அவற்றில் எதிலும் இம் மாதிரியான அசட்டுக் கருத்தை நான் பார்த்ததில்லை. ஒரு குடியிலே பலர் பிறந்திருந்தாலும், அவருள்ளே மூத்தவனை வருக என்று வரவேற்போர் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்; அறிவுடையவனைத்தான் அரசனும் வழிபட்டு ஒழுகுவான் என்றெல்லாம் அறிஞர்கள் எழுதிவைத்த நூல்கள் முழங்குகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி நீங்கள் என் கருத்தை மறுத்து விடலாம். என் சிறிய வாழ்க்கை அனுபவங் கூட இந்தக் கருத்துக்கு மாறானதாகவே யிருக்கிறது” என்று கூறினான் மகாலிங்க சாஸ்திரி.

"தம்பி, உன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுகிறாயா?" என்று வேண்டிக் கொண்டார் பெரியவர்.

மகாலிங்க சாஸ்திரி, தன்னுள் அமைந்த ஏதோ ஒரு சூத்திரத்தைத் தட்டிவிட்டாற் போன்ற உணர்ச்சியுடன் முன்பின் தெரியாத அந்தக் குடியானவரிடம் தன் பிறப்பு வளர்ப்பெல்லாம் எடுத்துக் கூறத் தொடங்கி விட்டான்.

"ஐயா, ராஜகிரியிலே மகா பண்டிதர் சாம்பசிவ சாஸ்திரியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவருடைய மகன்தான் நான். என்னுடன் கூடப் பிறந்தவர்கள் -அதாவது எனக்கு முந்திப் பிறந்தவர்கள்-மூவர். என் இனச் சேர்த்து நான்கு பேர். என் அண்ணன்மார் மூவரையும் பற்றி நான் சொல்லிவிட்டாலே இந்த வாசகம் பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.