பக்கம்:அஞ்சலி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182 லா. ச. ராமாமிருதம்

“வால்மீகி—Don’t do that—”

“நான் என்ன செய்துவிட்டேன்?” நிஜமாய் எனக்கே தெரியவில்லை. அவள் மனம் புண்படும்படி என்னை அறியாமல்கூட நான் ஏதோ செய்துவிட்டேனே எனும் எண்ணத்தைத் தாங்கக்கூட எனக்குச் சக்தியில்லை. பயமாயிருந்தது.

“என்னையே அப்படிக் கவனிக்காதே.”

“ஓ! நான் என்ன செய்வேன்? என்னால் உன்னைப் பார்த்துக்கொண்டு இராமல் முடியவில்லையே!”

“இல்லை, எனக்கு ஒரு சமயம்போல் இல்லை; இம்சையாயிருக்கு, பயமாயிருக்கு, என்னவோ CID மாதிரி—”

“காயத்ரீ என்னை மன்னித்துவிடு.” என் தொண்டை கம்மிற்று.

சட்டென அவள் முகம் மாறிற்று. சிரித்துவிட்டாள். என் மடிமேல் செல்லமாய் உட்கார்ந்து என்மேல் சாய்த்தாள்.

“வால்மீகி, உனக்கு என்மேல் ரொம்ப ஆசையா?”—

“கதவு திறந்திருக்கிறது, யாராவது வரப்போகிறார்கள்—”

“வந்தால் வரட்டும். எனக்கு ஒண்னும் வெட்கமில்லை—” கையை அலட்சியமாய் உதறினாள். அந்தச் சைகையில் குழந்தை போலும் கவர்ச்சியாயிருந்தாள்.

“உனக்கு என்மேல் ரொம்ப ரொம்ப ரொ—ம்—ம்—ப ஆசையா?”

“ஆம்; உன்மேல் ஏதாவது வாசனை பூசிக் கொண்டிருக்கிறாயா?”

“இல்லையே ஸென்டே எனக்குப் பிடிக்காது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/192&oldid=1033487" இலிருந்து மீள்விக்கப்பட்டது