பக்கம்:அஞ்சலி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 185

“காயத்ரீ! இது அம்மாவின் வீணை. அவள் இறந்து போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இந்த வீணையை வாசித்தாள். அவள் கைரேகைகள் இதன்மேல் படிந்திருக்கின்றன. அவை கலையாமல் நான் காப்பாற்றி வருகிறேன்.

“ஓ!—”

இரு கைகளையும் பிசைந்துகொண்டு நின்றாள். அற்புதமான அழகு பொருந்திய முத்திரைகளில் எப்படி அவளால் நிற்க முடிகிறது? அவள் அங்கங்களிலும் அங்கங்களின் நிலைகளிலும் சொல்லிய அழகுகளுடன் சொல்லாத அழகுகளும் எப்படி கற்பனை ஸ்வரங்கள் போல் வெளிப்படுகின்றன?

அவள் விழி ஒரங்கள் திடீரென சிவந்தன. மளமளவென கண்ணீர் உதிர்ந்தது. பீங்கான்போல் வழுவழுத்த கன்னங்களில் வழிந்துகொண்டேயிருந்தது. என் நெஞ்சையடைத்தது. என் தாயின் நினைவுக்கா கண்ணிர் விடுகிறாள்?

சட்டென மனதைத் திடப்படுத்திக் கொண்டவள் போல் வீணைமேல் போர்த்திய உறையைக் கழற்றி எறிந்தாள். கீழே உட்கார்ந்து வாத்தியத்தைத் தன்மேல் சார்த்திக் கொண்டாள். ஸ்வரஸ்தானங்களிலிருந்து கோர்வையற்று ஸ்ருதிகலைந்த சப்தங்கள் எழுந்தன; அவள் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. அவைகளில் சிரிப்பு இல்லை; எனக்கு அவள்மேல் இருக்கும் அதிகாரத்தை ஆழம் சோதிக்கும் இரக்கமற்ற கபடுதான் இருந்தது.

எனக்கு என்ன அதிகாரம் இருந்தது? ஒரு வருஷமாய் நான் காப்பாற்றி வந்த அடையாளங்களை ஒரே நொடியில் இதோ அழித்துக் கொண்டேயிருக்கிறாள். இவளை நான் என்ன செய்ய முடிகிறது? அதுவும் என்ன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/195&oldid=1026255" இலிருந்து மீள்விக்கப்பட்டது