பக்கம்:அஞ்சலி.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184 லா.ச. ராமாமிருதம்

“என்ன சொல்லல்லையாம்? சின்னக் குழந்தைமாதிரி கோபத்தில் உதடுகள் பிதுங்கின. “நான்தான் குண்டு காயத்ரீ வாயாடி காயத்ரீ.”

எனக்கு அசதிமேலிட்டது. இதயத்தில் ஏதோ நெருப்பு குழம்பாய் உருகி வழிந்தது. ஜூரம் கண்டால்போல் உடம்பு கணகணவென்றது.

“ஹும்—” பெருமூச்செறிந்தான்.

“காயத்ரீ, கோபம் பண்ணாதே. நீ கோபித்தால் எனக்குத் தாங்கவில்லை—”

தன்னிரக்கத்தில் “த்ஸோ” கொட்டிக்கொண்டு எழுந்தாள். என்னைவிட்டு ஒதுங்கின மாதிரியில்லை எனக்கு. என்னைவிட்டுப் பிரிந்த மாதிரியே இருந்தது. இந்த வேதனைகூட என்னால் பொறுக்க முடியவில்லை.

ஒரு காரியமுமில்லாமல் தங்கித்தங்கி அறையைச் சுற்றி நடந்தாள். சுவரோரமாய் உறை போட்டு சாத்தியிருந்த வீணைமேல் அவள் கண்கள் விழுந்தன. உடனே அதை எடுக்க ஆரம்பித்தாள்.

“வேண்டாம்—” என்று கூவினேன்.

ஒரு வெட்டு வெட்டி அவள் முகம் என்பக்கம் திரும்பிற்று. கோபம் கலந்த வியப்பில் புருவங்கள் நெறிந்தன.

“காயத்ரீ—”

நான் எழுந்து மெதுவாய் அவளை நோக்கிச் சென்றேன். என்னைவிட்டு எவ்வளவு தூரம் நடந்து விட்டாள்! என் செவிகளில் “ஙாெய்ய்...” என்று வண்டுகள் கூவின. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டேன். அவள் என் பிடியிலிருந்து தன் கைகளை மெதுவாய் விடுவித்துக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/194&oldid=1033489" இருந்து மீள்விக்கப்பட்டது