பக்கம்:அஞ்சலி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 243

அவனுக்கு வாயடைத்து விட்டது.

“நான் எரிந்துகொண்டேயிருக்கிறேன்.”

அப்படிச் சொல்கையிலேயே, திடீரெனத் தகதகத்தாள். அவனுக்குக் கண்கள் கூசின. அவன்மேல் அனல் வீசிற்று.

“இதோ இது என் ப்ரளயம்!” ஜன்னலுக்கு வெளியே சுட்டிய அவள் விரல் நுனிகளினின்று மின்னல்கள் நீலத்தில் திகுதிகுத்தன. அக்கணமே தாழ்வாரத்தில் மழை இறங்கிற்று. நிமிடத்தில் முற்றம் வழிந்து சொம்பும் தவலையும், முதலிரவு தேய்க்கப் போட்ட பற்றுப் பாத்திரங்களும் தெப்பலாடின.

“நான் என்னுள் புரண்டேன்.”

அவன் கீழ் பூமியதிர்ந்தது.

திடீரென்று அவள் எறிந்த பெருமூச்சினின்று எழுந்த காற்றின் வேகத்தில் ஜன்னல் கதவுகள் இறக்கையடித்துக் கொண்டன. கொல்லையில் தென்னை முறிந்தது. செவிக்கு எட்டிற்று.

“உன் புயல்” என்றான்.

அவள் விழிகளில் கண்ட பயம் தன்னையும் தொற்றிக் கொண்டதும் மாடாய் மிரண்டான். அவள் கன்னத்தில் அவன் அறைந்த அறை, கூடம் அதிர்ந்தது.

“என்னடா?”

அவன் முகம் திரும்பிற்று. யாரோ, ஏதோ மறந்த முகத்தை அடையாளம் கூட்டுவது போன்ற திகைப்பில் கண் புழுங்கிற்று. அம்மா இங்கே இருக்கிறாளா என்ன? என் கட்டிடம் ஏன் இப்படிக் கிடுகிடுத்துப் போச்சு?

ஏகாவுக்கு உடல் ஆடிற்று. அவன் அவளைத் தாங்கி, அவள் தலையைத் தாழ்த்தி, மடியில் வைத்துக்கொண்டான். அவன் விழி பெருகிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/253&oldid=1033531" இலிருந்து மீள்விக்கப்பட்டது