உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அஞ்சலி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தரங்கிணி 33

“என்னை அந்த வார்த்தை ஏதோ வேதனைப்படுத்துகிறது” என்று அவன் முனகினான்.

“பயமாயிருக்கா?”

“பயமா?”— அவனுக்கு ரோஷம் பொங்கிவிட்டது. “எதுக்குப் பயம்? நான் எதுக்கும் பயப்படமாட்டேன்!”

அப்படின்னா சொல்லுங்கோளேன்.

“சரி சத்தியமாய்ச் செய்கிறேன், மனுஷ சாத்தியத்திலிருந்தால்.”

“நீங்கள் இன்னொரு கலியாணம் எனக்காகப் பண்ணிக்கொள்ளப் போகிறீர்கள்.”

அவ்வறையில் ஓர் இமைநேரம் நித்தியத்தின் கனம் தொங்கிற்று. ஜன்னலுக்கு வெளியே நிலவு கொடுக்கரிவாள் போல் முளைத்திருந்தது.

மறுகணம் அவன் அவளைத் தன்னிடமிருந்து வீசியெறிந்த வேகத்தில் அவள் எட்டடி தூரம் போய்த் தரையில் வீழ்ந்தாள். அவளது பின் மண்டை மேஜை விளிம்பில் ‘ணக்’கென்று மோதும் சப்தம் அறை முழுதும் அதிர்ந்தது.

அவன் எழுந்து விளக்கைப் போட்டான்.

அவன் கண்களில் தணல் வீசிற்று. கடித்த பற்களினிடையிலிருந்து வார்த்தைகள் சீறிக் கொப்புளித்தன.

“சூன்யக்காரி! சூன்யக்காரி! கோயிலுக்குப் போய் சூன்யம் வைக்கத் தெரிந்துகொண்டுதான் வந்தாயா! இந்தக் கைகேசி வரம் கேட்கத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?”

அவள் பின்மண்டையில் அடிபட்ட இடத்தைத் தேய்த்துக்கொண்டு எழுந்திருக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. பின்னுக்குத்தான் தள்ளிற்று.

அ.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/43&oldid=1033398" இலிருந்து மீள்விக்கப்பட்டது