38 லா. ச. ராமாமிருதம்
மழைத்துளியை நேரே வாயிலே பிடிக்கணும்னு ஆசை. நம்மைச் சுற்றித் தூறல் கொட்டினாலும், வாய்க்கு நேரே முத்து எங்கே விழறது? விழறப்போதானே விழும்!”
***
“போடி! அவருக்கு என்ன தெரியும்? குழாயடியில் ஸ்நானம் பண்ணிப் பண்ணி ஜல விஸ்தீர்ணத்துக்கே வர மாட்டேன் என்கிறார்! அதை அவரால் அடையாளம் கூடக் கண்டுபிடிச்சுக்க முடியவில்லை. ஆனால் அவர் மேல் தப்பில்லை. அவரை அப்படிப் பண்ணிவிட்டாள், என்ன பண்றது. அவர் எவ்வளவு பெரிய ஜலம் என்று அவருக்கே தெரியல்லே. இருந்தாலும் எவ்வளவு நல்லவர் தெரியுமா? ரொம்ப ரொம்ப நல்லவர். ரொம்... ம்...ம்...ப!”
கட்டிலின் ஒரு பக்கம் அவன் நின்றுகொண்டிருந்தான். இன்னொரு பக்கம் கூழாங்கல் கண்ணாடிகளுக்குப் பின் பத்திரமாய்க் கவலைப்பட்டுக்கொண்டு டாக்டரும் நின்றார்.
“உங்கள் மனைவியை ஏதோ ஒர் எண்ணம் அழுத்திக் கொண்டிருக்கிறது ஸார். பாருங்கள் இடுப்பு எலும்பு கூடி விட்டது. ஜூரம் விட்டுவிட்டது. ஆனால் நினைவு மாத்திரம் தெளியவில்லை. What is it?
“இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்கு?”
உதட்டைப் பிதுக்கினார். கைகளை விரித்தார். “எப்படிச் சொல்ல முடியும்? இதுவரை நாலு மாதங்களாகிவிட்டன. I don't know. Wait, ஏதோ சொல்கிறாள்.”
அவளுடைய பார்வையற்ற கண்கள் அவளுள்ளே தாழ்ந்திருந்தன. கற்சிலையின் புன்னகையில் உதடுகள் லேசாய்க் குழைந்தன.