பக்கம்:அஞ்சலி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 39

“நான் ஒருநாள் குளிச்சுண்டிருந்தேன். அப்போ ஜலத்திலே ஒரு பூ மிதந்து வந்தது...”

கை விரல்கள், தாமாகவே மொக்கவிழ்ந்த மலரின் உருவை அமைப்பதில் மார்மேல் புலுபுலுத்தன.

“ஒரு சின்ன சொம்பளவு பெரிசுக்கு, வெள்ளை வெளேர்னு... அப்பா; என்ன அழகு தெரியுமா? நான் அதை எங்கிருந்து வந்ததுன்னு கேக்கல்லே. பிணத்து மேலே போட்டதா, மணத்து மேலே போட்டதான்னு கவலைப்படல்லே. எந்த இடத்துலே முளைச்சுது, கிள்ளின பூவா, தள்ளின பூவா, உதிர்ந்த பூவான்னு யோசனை பண்ணல்லே. எடுத்து அப்படியே கொண்டையிலே சொருகிண்டு ஜலத்தின் நிழலில் என்னைப் பார்த்துண்டேன். நான் அழகாயிருந்தேன். என்னைவிட அது அழகாயிருந்தது. ரொம்ப நாள் அது வாடவேயில்லை.”

டாக்டர் தன் மோவாயை யோசனையுடன் தடவினார்.

“Wonderfull wonderfull! உங்களுக்கு ஏதாவது புரிகிறதோ?”

‘ஆம்’ என்ற முறையில் அவன் தலையை அசைத்தான். இறுகிய தாடைகளில் மாலைகள் வழிந்தன.

“What is it?”

“இப்பொ என்ன அதைப்பற்றி! இவளைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் இரண்டு நாட்களில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாய் வெளியே சென்றான்.

***

‘ஊஹூம் நான் மனசிலே ஒண்ணும் ஒளிச்சுக்கல்லையே! உள்ளே ஒண்ணும் வெளியே ஒண்ணுமா நடத்துக்கல்லையே! நான் கைகேசியில்லை. என்னைத் தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/49&oldid=1023009" இலிருந்து மீள்விக்கப்பட்டது