பக்கம்:அஞ்சலி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 லா. ச. ராமாமிருதம்

“ஆமாம்.” சட்டென்று எழுந்து அறையின் ஒரு மூலையை வெறித்துக்கொண்டு நின்றாள்.

‘கண்டிப்பாய் நான் உன்னிடமிருந்து உன் இரக்கத்தைச் சகிக்கமாட்டேன். பார்! எனக்கென்று நான் எதையும் வெச்சுக்கல்லே. எல்லாத்தையும் எல்லாருக்கும் கொடுத்துவிட்டேன். உங்கள் இரக்கத்தை நான் விரும்பவில்லை. வாசலில் காத்துக்கிடக்கும் நாய்க்கு எச்சிற்கலை எரிவதுபோல்!"—

எனக்கு உடல் பறந்தது. “லக்ஷ்மி லக்ஷ்மி!”

என் அலறல் கேட்டு அவளுக்கு நனைவு சற்றுத் திரும்பிற்று.

“என்ன அம்பீ? என்னடா நான் பேசிண்டிருக்கேன்?”

அவள் தலை சுழன்றது. நான் தாங்கிக்கொண்டிராவிட்டால் மடேரென வீழ்ந்திருப்பாள். அவளை மெதுவாய்த் தரையில் கிடத்தினேன். அவளுக்கு நினை வில்லை. அன்றிரவு ஜூரம் கண்டுவிட்டது. ஜூரமா அது? மழு! ஊரிலிருந்த முலைப்பாலத்தனையும் கொண்டுவந்து நெற்றியில் நனைத்துப் போட்டும் மண்டையிடி தாங்கக் கூடியதாயில்லை. பக்கத்தில் சென்றாலே அனல் வீசிற்று. என் குழந்தை புரண்டு புரண்டு புழுவாய்த் துடித்தாள்.

“அம்பீ! அம்பி! தாங்க முடியல்லேடா! என் முதுகுத் தண்டே தீஞ்சு கருகிப்போச்சுடா! அம்பீ! அம்பீ!”

கடைசிவரையில் இதே அரற்றல்தான்.

“அம்பி, என்னைவிட்டுப் போயிடாதே! என் கிட்டேயே உட்காந்துக்கோ.இந்தா, இந்த பழத்தை உன் கையால் உறிச்சுக்கொடேன்.ஹய்யோ, என்னை ஒரு இடத்திலே இருக்கவிடலையே! இந்த ஈஸிச்சேரில் எடுத்து வையேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/80&oldid=1033421" இலிருந்து மீள்விக்கப்பட்டது