ஆழ்ந்த பகுதி
25
தடையிலாத் தொடர் முறையால் ஒரு இளைஞனைப் பரிசோதனை செய்தார்கள். வெளிப்புறத்திலிருந்து எவ்வித சத்தமோ வேறு தொந்தரவுகளோ இல்லாத அமைதியான ஓர் அறையில் அவர் ஒரு மஞ்சத்தில் படுத்திருக்கிறார். மங்கலான ஒளி அந்த அறையில் பரவியிருந்தது. ஒரே நிசப்தம். அவர் நிம்மதியாக, உடலுறுப்புக்களையெல்லாம் தளர்த்திவிட்ட நிலையில் படுத்திருக்கிறார். சோதனை செய்பவர் ஏதோ ஒன்றிரண்டு சொற்களைக் கூறினார். அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அந்த இளைஞருடைய மனத்தில் என்னென்ன எண்ணங்கள் உண்டாகின்றனவோ அவற்றையெல்லாம் உடனுக்குடனே வெளிப்படையாக எவ்வித யோசனையோ தடையோ இல்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே ஏற்பாடு. பரிசோதனை செய்பவரிடம் நம்பிக்கையும், அவரோடு சேர்ந்து ஒத்துழைக்கவேண்டுமென்ற ஆவலும் அந்த இளைஞருக்குண்டு. ஆகையால் அவர் தமது மனத்திலே தோன்றியவற்றையெல்லாம் ஒன்று விடாமல் அப்படி அப்படியே வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார். அவர் கூறியதிலிருந்து கீழ்க்கண்ட ஒரு சம்பவம் வெளியாயிற்று.
அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்பொழுது அவர் தமது தாய்க்குப் பக்கத்தில் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தாராம். தாய் குழந்தையோடு கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறாள். அவர்கள் இருந்தது ஒரு பட்டிக்காடு. பட்டிக்காட்டிலே ஒரு கூரை வீடு. அப்படி அவர்கள் படுத்திருக்கும் போது கூரையிலிருந்து ஒரு பாம்பு குழந்தை மேலே தொப்பென்று விழுந்தது. தாய் அதைக் கண்டு வீரிட்டுக் கதறிவிட்டாள். தாய் கதறுவதைப் பார்த்துப் பையனும் பயந்து நடுங்கிக் கதறியிருக்கிறான்