பக்கம்:அடி மனம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அடிமனம்

நல்ல வேளை. பாம்பு யாரையும் கடிக்கவில்லை. அதுவும் பயத்தால் வேகமாக மறைவிடம் தேடி ஓடியிருக்க வேண்டும். இரண்டாம் வயதில் ஏற்பட்ட அந்த பயங்கர அதிர்ச்சி அந்த இளைஞரின் மனத்திலே அத்தனை காலமாக எங்கோ மறைந்து கிடந்து அப்பொழுது வெளியாயிற்று. அதற்கு முன்பு அதைப்பற்றிய நினைவே அவருக்குக் கிடையாது. இந்த அநுபவம் வெளியானதைக் கண்டு அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

தடையிலாத் தொடர் முறையால் இவ்வாறு அநுபவங்கள் வெளியாவதைக் காணக் காண பிராய்டுக்கு ஒரு யூகம் பிறந்தது. இந்த அநுபவங்கள் புதிதாக மனத்துக்குள் உண்டாகவில்லை. அவை மனத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால் நினைவுக்கு வராமல் எங்கோ இருந்திருக்கின்றன. அப்படியானால் இவ்வாறு மறைந்து கிடக்கும் அநுபவங்களும் இச்சைகளும் இருக்கும்படியான ஒரு பகுதி மனத்தில் இருக்க வேண்டுமல்லவா? அந்தப் பகுதியைக் தான் பிராய்டு மறைமனம் அல்லது நனவிலி மனம் என்று பிரித்துக் கூறலானார். இந்தப் பிரிவினையே மன ஆராய்ச்சியில் மனப் பகுப்பியல் என்ற ஒரு புதிய கிளை உண்டாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/31&oldid=1004421" இலிருந்து மீள்விக்கப்பட்டது